விதிமுறைகளை மீறினால் அனுமதிப் பத்திரம் இரத்து 

விதிமுறைகளை மீறும் சுற்றுலா ஒழுங்கமைப்பு நிறுவனங்களின் அனுமதிப் பத்திரம் இரத்து செய்யப்படும்

by Staff Writer 14-01-2021 | 3:29 PM
Colombo (News 1st) சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மீறும் சுற்றுலா ஒழுங்கமைப்பு நிறுவனங்களின் அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளூடாக கொரோனா தொற்று பரவாதிருக்கும் வகையிலேயே அனைத்து நடவடிக்கைககளும் திட்டமிடப்பட்டதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளிடமிருந்து இலங்கை மக்களுக்கும் இலங்கையர்களிடமிருந்து சுற்றுலாப் பயணிகளுக்கும் தொற்று பரவாதிருக்கும் வகையிலேயே திட்டங்கள் தீட்டப்பட்டதாக அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார். நாளொன்றுக்கு 2000 முதல் 2500 PCR பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த எண்ணிக்கையை மீறி, சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர முடியாது என சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் அனைத்து விமான சேவைகளுக்காகவும் விமான நிலையம் மீள திறக்கப்படும் என அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி கூறியுள்ளார். நாட்டின் சுகாதார கட்டுப்பாடுகளுக்கு அமைய, எல்லைகள் மூடப்பட்டுள்ள நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தர முடியும் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.