சட்டத்தரணிகளை பொலிஸ் துறையில் இணைத்துக்கொள்வதால் சுயாதீனத்தன்மைக்கு அழுத்தம் ஏற்படலாம்:  சட்டத்தரணிகள் சங்கம்

சட்டத்தரணிகளை பொலிஸ் துறையில் இணைத்துக்கொள்வதால் சுயாதீனத்தன்மைக்கு அழுத்தம் ஏற்படலாம்: சட்டத்தரணிகள் சங்கம்

சட்டத்தரணிகளை பொலிஸ் துறையில் இணைத்துக்கொள்வதால் சுயாதீனத்தன்மைக்கு அழுத்தம் ஏற்படலாம்: சட்டத்தரணிகள் சங்கம்

எழுத்தாளர் Staff Writer

14 Jan, 2021 | 9:07 pm

Colombo (News 1st) சிரேஷ்ட பொலிஸ் இன்ஸ்பெக்டர்களாக 150 சட்டத்தரணிகள் பொலிஸ் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டமை சட்டத்தரணிகள் தொழிற்சங்கத்தின் நற்பெயருக்கும் சுயாதீனத்தன்மைக்கும் அழுத்தம் விடுக்கக்கூடும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது மிகவும் சிறந்த முறையில் சகல தரப்பினருடனும் கலந்தாலோசித்த பின்னர் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ நீதி அமைச்சரான அலி சப்ரிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தீர்மானம் சார்ந்து எந்தவொரு கேள்வியும் தமது சங்கத்திற்கு இதுவரை விடுக்கப்படவில்லை எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் நீதி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சட்டத்தரணிகளை பொலிஸ் திணைக்களத்தின் கீழ் சேவைக்கு இணைத்துக்கொள்ள வேண்டியதன் தேவை என்னவென்று புரிந்துகொள்ள முடியாதுள்ளதென சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கூறியுள்ளார்.

எனினும், புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த மற்றும் நடைமுறையில் இருக்கும் சட்டங்களை மறுசீரமைப்பது தொடர்பாக நீதி அமைச்சர் எடுத்துள்ள நடவடிக்கைக்கு மதிப்பளிப்பதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அது பொலிஸ் மா அதிபரின் தலைமையில் அல்லாமல் சட்டமா அதிபரின் தலைமையின் கீழ் நடைபெற வேண்டும் எனவும், தனியான சேவையாக கருத்தப்பட வேண்டும் என்றும், பதவி உயர்வு, இடமாற்றம் ஆகியவற்றுக்கும் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதுடன் உயர் நீதிமன்ற சட்டங்கள் அவர்களுக்கு அதிகபட்சமாக்கப்பட வேண்டும் எனவும் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வழக்குகளை விரைவாக விசாரணைக்கெடுத்து முடிப்பதே தற்போதைய தேவையாக இருக்குமானால் 150 சட்டத்தரணிகளை இவ்வாறு இணைத்துக்கொள்வதற்கு பதிலாக 6 மாற்று யோசனைகளை முன்வைப்பதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கூறியுள்ளார்.

இதன் பிரகாரம், குறித்த தீர்மானம் தொடர்பாகவும் சட்டத்தரணிகள் தொழில் தர்மம் குறித்தும் எழக்கூடிய அழுத்தங்கள் தொடர்பில் கவனத்திற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாகவும் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயங்கள் தொடர்பாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் இயலுமை தமது சங்கத்திற்கு உள்ளதெனவும் இது குறித்து நீதி அமைச்சர் உடனடி கவனம் செலுத்துவார் என எதிர்பார்ப்பதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்