ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இரத்தாகுமா? 

by Staff Writer 13-01-2021 | 11:49 AM
Colombo (News 1st) நான்கு வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி சட்ட ரீதியாக எதிர்வரும் 06 மாதங்களில் இரத்தாகும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குற்றச்செயலுக்காக குறைந்தபட்சம் 2 வருடங்களுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அதில் 06 மாதங்களுக்கு மேல் தண்டனை அனுபவிக்கும் பட்சத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பதவி சட்டரீதியாக இரத்தாகும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹோவா குறிப்பிட்டார். எனினும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 6 மாதங்களுக்குள் தண்டனையை இடைநிறுத்தினால் பாராளுமன்ற உறுப்பினருக்கான பதவி நீக்கப்படாது எனவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் 6 மாதங்கள் தண்டனையை அனுபவிக்கும் பட்சத்தில் அவருக்கான பதவி, விருப்புவாக்கு பட்டியலில் அடுத்து உள்ளவருக்கு சென்றடையும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹோவா தெரிவித்துள்ளார். இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து செய்யும் பட்சத்தில் மேற்கொள்ளப்படும் தீர்மானம் குறித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டாரவிடம் நாம் வினவிய போது, சட்டத்தரணிகளின் ஆலோசனை பிரகாரம் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.