கிழக்கு முனையத்தை விற்கவோ குத்தகைக்கு வழங்கவோ மாட்டோம்: ஜனாதிபதி தெரிவிப்பு

by Staff Writer 13-01-2021 | 7:26 PM
Colombo (News 1st) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்பனை செய்யப்படவோ குத்தகைக்கு வழங்கப்படவோ மாட்டாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ துறைமுக தொழிற்சங்க பிரிதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார். இன்று முற்பகல் இடம்பெற்ற துறைமுக ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் ஒன்றியத்திற்கு இடையிலான கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். உடன்படிக்கை தொடர்பில் அரசாங்கம் இந்தியாவுடன் மேற்கொண்டுள்ள கலந்துரையாடலின் பின்னர் துறைமுகத்தின் 51 வீத உரிமை மற்றும் நிர்வாகத்தை இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் வைத்துக்கொள்வதற்கு இணக்கப்பாட்டிற்கு வர முடிந்ததாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார். நாட்டிற்குள் மேற்கொள்ளப்படும் முதலீடுகளில் நாட்டின் இறையாண்மை மற்றும் சுயாதீனத்தன்மைக்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படுவதற்கு தாம் இடமளிக்கப் போவதில்லையென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பிராந்திய பூகோள அரசியல் காரணிகள், நாட்டின் இறையாண்மை, வருமானம் மற்றும் வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்ததன் பின்னரே கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டதாக ஜனாதிபதி கூறியுள்ளார். இந்த முதலீட்டு திட்டத்தின் கீழ் கிழக்கு முனையம் நிலையான அபிவிருத்திக்குள் உள்வாங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு முனையத்தின் மீள் ஏற்றுமதி நடவடிக்கைகளில் 66 வீதத்தை இந்தியாவே முன்னெடுக்கவுள்ளது. எஞ்சிய பகுதியில் 9 வீதமான மீள் ஏற்றுமதியை பங்களாதேஷ் உள்ளிட்ட சில நாடுகள் முன்னெடுக்கவுள்ளன. கிழக்கு முனையத்தின் 51 வீதம் அரசாங்கத்திற்கும், எஞ்சிய 49 வீதம் இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கும் சொந்தமானதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். ஏனைய தரப்பினருக்கு பங்குதாரர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் மேற்கொள்ளக்கூடிய முதலீடாக முனையத்தை அபிவிருத்தி செய்வது அரசாங்கத்தின் திட்டமாகும். இது தொடர்பில் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லையென தெரிவித்த ஜனாதிபதி அந்த திட்டம் தொடர்பில் தமது யோசனை மற்றும் எண்ணத்தை முன்வைப்பதாக தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார். துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் நடவடிக்கைகளை துறைமுக அதிகாரசபைக்கு வழங்க தாம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.