கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

by Chandrasekaram Chandravadani 13-01-2021 | 10:00 AM
Colombo (News 1st) இன்று (13) காலை வரையான 24 மணி நேரத்திற்குள் நாட்டில் புதிதாக 588 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி குறிப்பிட்டுள்ளது. அவர்களுள் நால்வர் வௌிநாடுகளில் இருந்து வருகை தந்த இலங்கை பிரஜைகளாவர். ஏனைய 584 பேரில் அதிகமான தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் 158 பேரும் கொழும்பு மாவட்டத்தில் 147 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 32 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 09 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் ஐவரும் வவுனியா மாவட்டத்தில் 06 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 10 நபர்களும் புத்தளம் மாவட்டத்தில் 06 நபர்களும் புதிதாக தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் 23 பேர், கொம்பனித்தெரு பிரதேசத்தில் 08 பேர், நாரஹேன்பிட்ட பகுதியில் 09 பேர், வௌ்ளவத்தை பகுதியில் 06 பேர், பொரளை பகுதியில் 07 பேர், மருதானையில் 10 பேர், புறக்கோட்டை பகுதியில் 10 பேர், புளூமென்டல் பகுதியில் 11 நபர்கள், கிரேண்ட்பாஸ் பகுதியில் 08 பேர், மட்டக்குளி பகுதியில் 16 நபர்கள் அடங்கலாக கொழும்பு மாவட்டத்தில் 147 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டத்தின் பியகம பகுதியில் 38 பேருக்கும் கடவத்தை பகுதியில் 07 பேருக்கும் வத்தளை பகுதியில் 15 பேருக்கும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டி பகுதியில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். அதேநேரம், அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிரதேசத்தில் 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நுவரெலியா பிரதேசத்தில் ஒருவரும் வட்டவளை பகுதியில் மூவரும் அம்பேவெல பகுதியில் ஒருவரும் உள்ளடங்கலாக நுவரெலியா மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஐவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. திருகோணமலை பிரதேசத்தில் 06 பேரும் கிண்ணியா பகுதியில் நால்வரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வவுனியா பகுதியில் ஐவருக்கும் பம்பைமடு பிரதேசத்தில் ஒருவரும் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர். வவுனியா பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 19 கிராம சேவையாளர் பிரிவுகள் நேற்று (12) முதல் முடக்கப்பட்டுள்ளன. குறித்த பிரதேசங்கள் எதிர்வரும் சனிக்கிழமை வரை தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என வவுனியா சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் மகேந்திரன் குறிப்பிட்டுள்ளார். இன்று (13) காலை வரையில் நாட்டில் மொத்தமாக 49537 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அதேநேரம், 42,621 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 6,675 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொழும்பு - 13, ஹங்வெல்லை, மாத்தளை மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளில் நேற்றைய தினம் (12) நால்வர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளனர். இதனை அடுத்து, இதுவரை நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 244 ஆக அதிகரித்துள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி குறிப்பிட்டுள்ளது. நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் 80 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 6,606 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, மாலைதீவு, கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளிலிருந்து மேலும் 197 பேர் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.