13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க இந்தியா இடமளிக்காது: சி.வி.விக்னேஸ்வரன்

13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க இந்தியா இடமளிக்காது: சி.வி.விக்னேஸ்வரன்

13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க இந்தியா இடமளிக்காது: சி.வி.விக்னேஸ்வரன்

எழுத்தாளர் Staff Writer

12 Jan, 2021 | 6:31 pm

Colombo (News 1st) யுத்தம் நிறைவடைந்து 11 வருடங்கள் கடந்துள்ள போதிலும் வட மாகாணத்தில் எவ்வித முன்னேற்றங்களும் ஏற்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் முன்னேற்றம் ஏற்படுவதை மத்திய அரசாங்கம் விரும்பவில்லை என்பதே யதார்த்தம் எனவும் சி.வி விக்கினேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கரை நேற்று (11) சந்தித்து கலந்துரையாடிய போதே சி.வி. விக்னேஸ்வரன் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார ரீதியில் வடக்கு, கிழக்கு மக்களுக்கு உதவக்கூடிய வழிவகைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தியாவின் அனுசரணை இல்லாமல் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் கை வைக்க முடியாது எனவும், தமிழர்களுக்கு அதிக வலுவுள்ள அரசியல் அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்தாலே ஒழிய , 13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க இந்தியா இடமளிக்காது எனவும் பாராளுமன்ற உறுப்பினர், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொள்கைகளில் இருந்து பிறழ்வடைந்ததால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கி வெகுவாக குறைந்ததாக சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

போரின் போதும் அதன் பின்னரும் தமிழ் மக்களுக்கு என்ன நேர்ந்தது என்பதைப் பற்றி அறிந்துகொண்டாலே வடக்கு, கிழக்கு மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையால் தீர்மானிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

நியாயமான அரசியல் தீர்வு, மாணவர்களின் கல்வி நிலை உயர்வு, தொழில்வாய்ப்புகளை நடைமுறைப்படுத்துதல் தொடர்பிலும் இந்த சந்திப்பின்போது சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு கரையோரமாக வடக்கையும், கிழக்கையும் இணைப்பதற்கான அதிவேக நெடுஞ்சாலையின் அவசியம் தொடர்பிலும் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்