கொரோனா தடுப்பூசி: ஜனாதிபதி செயலணியின் அறிவித்தல்

கொரோனா தடுப்பூசி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் அறிவித்தல் 

by Staff Writer 12-01-2021 | 10:33 AM
Colombo (News 1st) தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் அனுமதியின்றி, எந்தவொரு கொரோனா தடுப்பூசியும் நாட்டுக்கு கொண்டுவரப்படாது என கொரோன தடுப்பூசி திட்டம் மற்றும் தேசிய அபிவிருத்தி தொடர்பிலான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது. நாட்டு மக்களுக்கு பொருத்தமான கொரோனா தடுப்பூசி எது என்பது குறித்து ஆராயப்படுவதாக கொரோனா தடுப்பூசி திட்டம் மற்றும் தேசிய அபிவிருத்தி தொடர்பிலான ஜனாதிபதி செயலணியின் தலைவர் லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் நாடுகளின் ஆராய்ச்சி அறிக்கைகள் மற்றும் தரவுகளை பயன்படுத்தி இந்த சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார். அவசர நிலமையின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதால், பரிசோதனைகளை துரிதப்படுத்தி விரைவில் நிறைவுசெய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி செயலணியின் தலைவர் லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார். இந்த பரிசோதனைகளுக்கு அமைவாக நாட்டில் தற்போது கிடைக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தடுப்பூசிகளை தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் அனுமதி கிடைக்கப்பெறும் என அவர் கூறினார். கொரோனா தடுப்பூசி தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு அரச ஔடதங்கள் கூட்டுத்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் பிரதம நிறைவேற்றதிகாரி, டொக்டர் கமல் ஜயசிங்க தெரிவித்தார். இந்த கோரிக்கை முழுமை பெற்றதன் பின்னர் பரிசோதனையை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறினார்.