தடுப்பூசி ஏற்றும் நிலையங்களை அதிகரிக்க தீர்மானம்

கொரோனா தடுப்பூசி ஏற்றும் நிலையங்களை அதிகரிக்க தீர்மானம் 

by Staff Writer 12-01-2021 | 1:59 PM
Colombo (News 1st) கொரோனா தடுப்பூசி ஏற்றும் நிலையங்களின் எண்ணிக்கையை 4000 இலிருந்து 5000 வரை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி திட்டம் மற்றும் தேசிய அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணி நேற்று மாலை கூடி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. ஊசி ஏற்றும் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி வழங்கல், தடுப்பூசியை பெற்றுக் கொள்வோரை பதிவு செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஆரம்ப சுகாதார சேவை, தொற்றுநோய் தடுப்பு, COVID - 19 கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சின் செயலாளர், வைத்தியர் அமல் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்தக்கூடிய ஏதேனும் ஒருவகை அல்லது சில தடுப்பூசி வகைகளை விரைவில் நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி செயலணியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பல அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.