வாடகை வாகனங்களுக்கு போலி ஆவணங்களை தயாரித்து விற்ற கும்பல் சுற்றிவளைப்பில் கைது

வாடகை வாகனங்களுக்கு போலி ஆவணங்களை தயாரித்து விற்ற கும்பல் சுற்றிவளைப்பில் கைது

எழுத்தாளர் Staff Writer

12 Jan, 2021 | 9:20 pm

Colombo (News 1st) வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளும் வாகனங்களுக்கு போலியான ஆவணங்களை தயாரித்து, அவற்றை விற்பனை செய்யும் பாரிய மோசடி சம்பவமொன்று பன்னிப்பிட்டிய பகுதியில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கைப்பற்றப்பட்டுள்ள வாகனங்களின் பெறுமதி 7 கோடி ரூபாவிற்கும் அதிகம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லேரியா பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் இன்ஸ்பெக்டர் என்.ஏ. களுவிதாரன உள்ளிட்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த குற்றச்செயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமது வாகனம் காணாமற்போனதன் பின்னர் ஒருவர் முல்லேரியா பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டினை அடுத்து, முறைப்பாடு செய்தவர் CCTV மூலம் பெற்றுக்கொண்ட சந்தேகநபரின் சில காட்சிகளை தமது நண்பர்களிடையே பகிர்ந்துள்ளார்.

அதற்கமைய, கொரோனா நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த வைத்தியசாலையொன்றில் முகக்கவசத்தை நீக்கிவிட்டிருந்த நபர் தான் சந்தேகநபர் என அடையாளம் காணப்பட்டதையடுத்து, இந்த திட்டமிட்ட குற்றச்செயல் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பமாகின.

அதன் பிரதிபலனாக நேற்று (11) சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, 16 கார்களும் வேன் ஒன்றையும் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாடகை அடிப்படையில் வாகனங்களை வழங்கும் நிறுவனங்களுக்கு சூட்சுமமான முறையில் போலியான ஆவணங்களை வழங்கி வாகனங்களைப் பெற்றுக்கொண்டு, அவற்றை சில நாட்களுக்குள் இவர்கள் விற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

வாகனத்தை வாடகைக்கு வழங்கிய உரிமையாளர்களுக்கு, மோசடியில் ஈடுபட்டவர்கள் பிரபலங்களின் முகவரியையே வழங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சுற்றிவளைப்பின் போது வாகன உதிரிப் பாகங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர்கள் வாகனங்களை பகுதி பகுதியாகப் பிரித்து அதன் உதிரிப்பாகங்களை விற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்கள் யக்கல மற்றும் மீரிகம பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

இந்த மோசடியுடன் தொடர்புபட்ட பலர் தற்போது தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்