ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை

எழுத்தாளர் Staff Writer

12 Jan, 2021 | 11:02 am

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 04 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக அவருக்கு இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான விஜித் மலல்கொட, பீ. பத்மன் சூரசேன மற்றும் சிசிர டீ ஆப்றூ ஆகியோரோல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி அலரி மாளிகைக்கு அருகில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது, நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் தொடர்பில் வௌியிட்ட கருத்துகளினூடாக நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாக ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியதால், நீதியரசர்கள் குழாமின் தலைவரான சிசிர டி ஆப்றூ, குற்றவாளியான பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு கடூழிய சிறைத்தண்டனையை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

வேண்டுமென்றே இவர் கருத்துகளை வௌியிட்டுள்ளமை, நீதிமன்ற வழக்கு விசாரணைகளின் பின்னர் அங்கிருந்து வௌியேறும் போது தெரிவித்த கருத்துகளூடாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நீதியரசர் தமது தீர்ப்பை அறிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற இராணுவ உத்தியோகத்தரான சுனில் பெரேரா என்பவரினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, சட்ட மா அதிபரால் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்