போலி ஆவண வாகன வியாபாரம் தொடர்பில் வௌிக்கொணர்வு

போலி ஆவண வாகன வியாபாரம் தொடர்பில் வௌிக்கொணர்வு

எழுத்தாளர் Staff Writer

12 Jan, 2021 | 11:49 am

Colombo (News 1st) வாகனங்களை வாடகைக்கு பெற்று, அந்த வாகனங்களின் ஆவணங்களை போலியானதாக மாற்றி விற்பனை செய்கின்றமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதி பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் ஊடகப்பேச்சாளருமான அஜித் ரோஹன இது தொடர்பில் ​தெளிவுபடுத்தியுள்ளார்.

வாகனங்களை வாடகைக்கு பெற்று, அந்த வாகனங்களின் ஆவணங்களை போலியானதாக மாற்றி அதனை விற்பனை செய்யும் குழுவினர் தொடர்பில் முல்லேரியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய முல்லேரியா பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்ததாக பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

குறித்த குழுவினர் வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனமொன்றிலிருந்து வாகனங்களை பெற்று, வருமான வரிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை போலியாக தயாரித்து, செசி இலக்கம், இயந்திரத்தின் இலக்கம் உள்ளிட்டவற்றை மாற்றியமைத்து அதனை விற்பனை செய்து வந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அது மாத்திரமன்றி இவ்வாறு பெறப்பட்ட வாகனங்களின் உதிரிப்பாகங்களையும் இவர்கள் விற்பனை செய்து வந்துள்ளதாகவும் குறித்த குழுவினரிடமிருந்து வாகனங்களை கொள்வனவு செய்த தரப்பினர் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன மேலும் கூறினார்.

அதன்பிரகாரம் வாகன மோசடியுடன் தொடர்டைய யக்கல மற்றும் மீரிகம ஆகிய பகுதிகளை சேர்ந்த இருவரை நேற்று முல்லேரியா பொலிஸார் கைது செய்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.

இவ்வாறு போலியான ஆவணங்களின் மூலம் தயாரிக்கப்பட்ட 17 வாகனங்களையும் முல்லேரியா பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் அவற்றில் 16 மோட்டார் சைக்கிள்களும் ஒரு வேனும் உள்ளடங்குகின்றதாகவும் கூறிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, தங்களது வாகனங்களும் இவ்வாறு காணாமல் போயிருக்கும் பட்சத்தில் முல்லேரியா பொலிஸ் நிலையத்துக்கு சென்று அதனை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு கோரியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்