யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் நினைவுத் தூபிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது 

by Staff Writer 11-01-2021 | 2:09 PM
Colombo (News 1st) யாழ். பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீண்டும் அதே இடத்தில் அமைப்பதற்காக இன்று (11) காலை அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக துணை வேந்தர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் புதிய தூபி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீண்டும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டதை அடுத்து மாணவர்களின் உண்ணாவிரத போராட்டமும் கைவிடப்பட்டுள்ளது. இறுதிக்கபட்ட போரில், முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த தூபி கடந்த வௌ்ளிக்கிழமை (08) இரவு இடிக்கப்பட்டது. பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்த செயற்பாட்டிற்கு எதிராக மாணவர்கள் சிலர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்த துணைவேந்தர் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாகவே இன்று காலை புதிய தூபி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை மாணவர்கள் முடிவுக்கு கொண்டுவந்தனர். நினைவுத்தூபி இடிக்கப்பட்டதை கண்டித்தும் மீண்டும் தூபியை அமைக்குமாறு வலியுறுத்தியும் இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தழுவிய ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.