பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி ஹரீன் பெர்னாண்டோ கடிதம்

பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி ஹரீன் பெர்னாண்டோ கடிதம்

எழுத்தாளர் Staff Writer

10 Jan, 2021 | 8:16 pm

Colombo (News 1st) ஜனாதிபதியின் நேற்றைய கருத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ, பொலிஸ் மா அதிபர் C.D. விக்ரமரத்னவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

ஜனாதிபதியின் கருத்து அடங்கிய காணொளி மற்றும் பிரதியை இணைத்து பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ, பொலிஸ் மா அதிபருக்கு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.

தேசத்துரோகம், இனப்படுகொலை, பயங்கரவாத, கொடூரமான செயல்களில் ஈடுபட்டவருக்கும் பாராளுமன்றத்தில் கருத்து சுதந்திரத்திற்காக தமது அடிப்படை உரிமையை நடைமுறைப்படுத்தும் மக்கள் பிரதிநிதிக்கும் இடையிலான வேறுபாட்டினை அடையாளம் காண்பதில் ஜனாதிபதி தோல்வி கண்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

அவர் தமது சேவையில் தொடர்ச்சியாக தோல்வியடையும் வரை தமது உயிருக்கு எவ்வாறான ஆபத்து ஏற்பட்டாலும், அவர் விரும்பாவிட்டாலும் உண்மையை உரைக்கும் பொறுப்பை தாம் நிறைவேற்றுவதாக பாராளுமன்ற உறுப்பினரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நான் ஒருபோதும் பயங்கரவாதிகளுடன் தொடர்புபடவில்லை என்பதை நினைவுபடுத்த வேண்டும். தமிழ் மக்களை வாக்களிப்பிலிருந்து தடுப்பதற்கு நான் ஒருபோதும் பயங்கரவாதிகளுக்கு இலஞ்சம் வழங்கவில்லை. இதுவரை எவரைவிடவும் அதிகளவிலான பொலிஸ் அதிகாரிகளை கொலை செய்த கருணா அம்மானை கட்டியணைக்கவில்லை. அனைத்தையும் விட நான் அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கை பிரஜையே தவிர வேறொரு நாட்டின் பிரஜையல்ல. வேறொரு நாட்டின் பிரஜையல்ல. நான் அவருக்குப் பிடிக்காத விடயங்களை பற்றி பேசினால் என்னை ”நாயை போன்று கொலை செய்வதற்கு” அவரால் முடியும் என ஜனாதிபதி தௌிவாக கூறினார். பாதுகாப்புப் படைகளின் தலைவர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஸவினால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலின் பாரதூர தன்மையை கருத்திற்கொண்டு அவரால் எனக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பது உணர்த்தப்பட்டுள்ள நிலையில் அவர் தொடர்பில் மேலும் சந்தேகம் கொள்வதற்கு எனக்கு காரணம் இல்லை. அது உறுதியானது. நான் அவருடைய முதற்பெயரை குறிப்பிட்டதால் மாத்திரம் ஜனாதிபதி இந்தளவு குழப்பமடைந்தமை தொடர்பில் நான் ஆச்சரியமடைகிறேன்’

என பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றில் ஜனாதிபதிகள் நீண்ட காலமாக அவர்களின் பெயர் அல்லது முதற்பெயரை கொண்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளமையை ஹரீன் பெர்ணான்டோ தனது கடிதத்தில் நினைவுபடுத்தியுள்ளார்.

ஜே.ஆர், பிரேமதாஸ, டீ.பீ. சந்திரிக்கா, மஹிந்த, சிறிசேன ஆகிய பெயர்கள் பயன்படுத்தப்பட்டமையால் அவர்கள் எவருக்கும் ஒருபோதும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கவில்லை எனவும் ஹரீன் பெர்ணான்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி உறுதியாக நிரூபிக்காவிட்டால் வன்முறையில் ஈடுபடுமாறு அவருக்கு மகாசங்கத்தினர் ஆலோசனை வழங்கினார்கள் என்பதை நம்புவது கடினமானது எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் அவரை விமர்சித்த பெரும்பாலான ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் காணாமலாக்கப்பட்டார்கள் அல்லது கொலை செய்யப்பட்டார்கள் என்பது தமக்கு தெரியுமெனவும் அந்த தாக்குதல்களுக்கு முன்னர் அரசியல்வாதிகளினால் போலியான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகவும் பயனற்ற வகையில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட செய்யப்பட்டதாகவும் ஹரீன் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

பயங்கரவாதியைப் போன்று கொலை செய்யப்படலாம் என்ற அச்சமின்றி தாம் விரும்புவதை கூறுவது அடிப்படை உரிமையாகும் என பாராளுமன்ற உறுப்பினர், பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மாஅதிபரே, நீங்கள் இலங்கை குடியரசின் பொலிஸ் மா அதிபரே அன்றி ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஸவின் தனிப்பட்ட சேவகர் அல்ல. பாராளுமன்ற உறுப்பினர்களின் உயிர் மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்குமாறு நான் உங்களிடம் கோருவது தனிப்பட்ட உதவியல்ல. நீங்கள் பதவிப்பிரமாணம் செய்துள்ள குடியரசின் அரசியலமைப்பை பாதுகாப்பதற்கு உங்களுக்கு பொறுப்புள்ளதன் காரணமாகவே நான் இதனை கோருகின்றேன்

என ஹரீன் பெர்னாண்டோ தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மௌனமாக இருப்பதை நிராகரிப்பதால், தாம் உயிரிழந்தால் இதுவரையான காலத்தில் அத்தகைய அச்சுறுத்தலை விடுத்த ஒரே ஒருவரின் அபிப்பிராயத்திற்கு அமைய அது இடம்பெறும் என நினைப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பொலிஸ் மா திபருக்கு அறிவித்துள்ளார்.

இந்த கடிதத்தின் பிரதிகளை சபாநாயகர், சட்ட மா அதிபர், கொழும்பிலுள்ள வௌிநாட்டு தூதரக அதிகாரிகள், ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் அனுப்பியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்