நினைவுத்தூபி இடித்தழிப்பு: யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது என்ன?

by Staff Writer 09-01-2021 | 2:57 PM
Colombo (News 1st) யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டதை அடுத்து, நேற்றிரவு அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. மாணவர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் நேற்றிரவு முதல் பல்கலைக்கழகத்திற்கு முன்பாகக் கூடியிருந்தனர். யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி பெக்கோ இயந்திரத்தை பயன்படுத்தி அழிக்கப்படும் காட்சி சமூக வலைத்தளங்களில் நேற்றிரவு வௌியானது. இறுதிக்கட்ட போரில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபியே அழிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, மாணவர்கள் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் அங்கு சென்றிருந்த போதிலும், பல்கலைக்கழகத்திற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. பின்னர், அவர்கள் அனைவரும் பல்கலைக்கழகத்திற்கு முன்பாகக் கூடிய நிலையில், பாதுகாப்புத் தரப்பினர் வரவழைக்கப்பட்டனர். இந்த நிலையில், அங்கு கூடியிருந்தவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இதனிடையே, பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மாணவர்களுக்கு எதிராக பொய்யான வழக்குகளை தாக்கல் செய்வதாக பொலிஸார் மிரட்டியதாக யாழ். பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர், சட்டத்தரணி கே.சுகாஸ் குறிப்பிட்டார். பல்கலைக்கழக துணைவேந்தரை சந்திக்க வேண்டும் என அவர்கள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து காத்திருந்தனர். எனினும், பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் எவரும் அங்கு செல்லாமையால், பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இரவு முழுவதும் அவர்கள் தங்கியிருந்தனர். இன்று நண்பகல் வரை மாணவர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக தமது எதிர்ப்பை வௌிப்படுத்தினர். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கூடியிருந்தவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் பொலிஸார் இன்று அறிவித்தனர். கலைந்து செல்லாவிட்டால் PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும் என இதன்போது ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டமையையடுத்து, பெரும்பாலானவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் உண்ணாவிரதப் போராட்டமொன்றை இன்று பகல் ஆரம்பித்தனர். உயர் மட்டத்திலிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே, யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து நினைவுத் தூபி அகற்றப்பட்டதாக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்தார். நினைவுத்தூபியை அகற்றுமாறு உயர் மட்டத்திலிருந்து பல மாதங்களாகக் கூறப்பட்டதாக, யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்தார். நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்களா அல்லது நாம் அதனை முன்னெடுக்கவா என அவர்கள் இறுதியில் கேட்டதாகவும் துணைவேந்தர் கூறினார். அவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில், நினைவுத் தூபியை அகற்றுமாறு தான் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்தாக துணைவேந்தர் தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சு கூறும் நிலையில், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இடமளிக்க முடியாது என, துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா குறிப்பிட்டார். இது, பாதுகாப்பு அமைச்சு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு என அனைத்து தரப்பினராலும் விடுக்கப்பட்ட கூட்டு உத்தரவு எனவும் அவர் கூறினார். அது அனுமதியற்ற நிர்மாணம் எனவும் சர்ச்சைக்குரிய விடயம் எனவும் அவ்வாறானவற்றை பல்கலைக்கழத்திற்குள் நிர்மாணிக்க முடியாது எனவும் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் குறிப்பிட்டார். உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்ட அறிவுறுத்தல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் கூறினார். இந்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கவிடம் வினவிய போது, நினைவுத் தூபியை அகற்றுமாறு யாரால், எந்த காலப்பகுதியில் அறிவுறுத்தப்பட்டது என்பது குறித்து ஆராயப்பட வேண்டும் என பதிலளித்தார். யாழ். பல்கலைக்கழகம் நிர்வாகமொன்றின் கீழ் இயங்கும் சுயாதீன நிறுவனம் எனவும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும், இது குறித்து திங்கட்கிழமையே தம்மால் உறுதியான விடயங்களைக் கூற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.