இதுவரை 10,000-இற்கும் அதிகமான கைதிகள் விடுவிப்பு

சிறைச்சாலைகளில் நெருக்கடி: இதுவரை 10,000-இற்கும் அதிகமான கைதிகள் விடுவிப்பு

by Staff Writer 09-01-2021 | 3:47 PM
Colombo (News 1st) கொரோனா தொற்று நிலையுடன், சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை குறைப்பதற்காக இதுவரை 10,065 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்டவர்களில் 60 வீதமானோர் போதைப்பொருள் தொடர்பிலான குற்றச்சாட்டினால் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் என சிறைச்சாலைகள் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. விடுவிக்கப்பட்ட கைதிகள் PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டே விடுவிக்கப்படுவதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கூறியுள்ளார். விடுவிக்கப்படும் கைதிகளுக்கு தொற்று உறுதிப்படுத்தப்படுமாயின், கொரோனா சிகிச்சை நிலையத்தில் 14 நாட்களுக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு, பின்னர் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தியே விடுவிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு விடுவிக்கப்படும் போதைப்பொருளுக்கு அடிமையான கைதிகளுக்காக விசேட புனர்வாழ்வளிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் சிகிச்சை வழங்கப்படும் நபர்களின் எண்ணிக்கையை 4,000 ஆக அதிகரிக்கப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சபையின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் லக்நாத் வெலகெதர குறிப்பிட்டுள்ளார்.