கொழும்பில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக தகவல்

by Staff Writer 09-01-2021 | 8:02 PM
Colombo (News 1st) கொழும்பு மாநகர சபை எல்லையில் பதிவாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக கொழும்பு பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்தார். ஒட்டுமொத்த ரீதியில் மதிப்பிடும் போது நான்கிற்கு ஒரு நோயாளர் என்ற வகையில் குறைவடைந்துள்ளதாக ருவன் விஜயமுனி குறிப்பிட்டார். இதற்கு முன்பு கொழும்பில் அன்றாடம் 375 முதல் 400 நோயாளர்கள் வரை பதிவாகினர். எனினும், தற்போது 90 முதல் 100 நோயாளர்கள் வரையே பதிவாகின்றனர் என அவர் மேலும் கூறினார்.
எம்மால் நோயை சிறப்பாகக் கட்டுப்படுத்த முடிந்துள்ளது. ஆனால், அதனூடாக கொழும்போ ஏனைய நகரங்களோ அபாயமற்றவை என்று அர்த்தமல்ல. நோய் அறிகுறியின்றி நோயாளர்கள் இருக்கின்றமையே அதற்குக் காரணமாகும்
என ருவன் விஜயமுனி சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும், மாநக சபை எல்லையில் சில இடங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. ஒக்டோபர் 21 ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்ட கொழும்பு 13, ஜிந்துப்பிட்டி பகுதி இதுவரை விடுவிக்கப்படவில்லை. இதேவேளை, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவும் கடந்த ஒக்டோபர் 21 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே நாரஹேன்பிட்டி தாம்பரே மாவத்தையின் 100 ஆம் இலக்க தோட்டம் கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்டது. அதனைத் தவிர டிசம்பர் 27 ஆம் திகதி முதல் டொரிங்டன் 255 ஆம் இலக்க தோட்டம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, தெமட்டகொடை - வேலுவன வீதி டிசம்பர் 27 ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்டதுடன், வௌ்ளவத்தை நசீர் தோட்டம் டிசம்பர் 17 ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்டது. முகத்துவாரம் அளுத்தமாவத்தையிலுள்ள புனித அன்ட்ரூஸ் மாவத்தை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநாகர சபையின் சுகாதாரப் பிரிவு தெரிவித்தது. இதேவேளை, மேலும் சில பகுதிகள் புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. பன்னல, மும்மான கிராம சேவகர் பிரிவு, வெத்தேவ கிராம சேவகர் பிரிவு மற்றும் பூஜாபிட்டிய பொலிஸ் பிரிவின் கொஸ்கொட பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட சில இடங்கள் இன்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக COVID தடுப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.