MTV செனல் - ஜோர்ஜ் ஸ்டூவர்ட் இடையிலான வழக்கு விசாரணை

by Staff Writer 08-01-2021 | 9:00 PM
Colombo (News 1st) MTV செனல் தனியார் நிறுவனத்திற்கு எதிராக ஜோர்ஜ் ஸ்டூவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை மேலதிக மாவட்ட நீதிபதி சந்துன் விதானவிடம் மாற்றுமாறு முறைப்பாட்டாளர் தரப்பினர் விடுத்த கோரிக்கைக்கு MTV செனல் தனியார் நிறுவனம் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். ஒவ்வொரு தரப்பினரதும் சிந்தனைக்கு ஏற்றவாறு நீதிபதிகளைத் தெரிவு செய்ய முடியாது எனவும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர். மாவட்ட நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முறைப்பாட்டாளர் தரப்பினால் நேற்று (07) நகர்த்தல் பத்திரமும் சத்தியக்கடதாசியும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக MTV செனல் தனியார் நிறுவனம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா தெரிவித்தார். சிவில் வழக்கு சட்டக்கோவையின் விதிகள் மற்றும் ஒழுங்குகளுக்கு இது முரணானது என்பதால், அந்த ஆவணத்தை வழக்குக் கோவையிலிருந்து நிராகரிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இதன்போது, மேலதிக மாவட்ட நீதிபதி சந்துன் விதானகே முன்னிலையில் வழக்கை மாற்றுமாறு ஜோர்ஜ் ஸ்டூவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா கோரிக்கை விடுத்தார். ஆரம்பத்தில் ஒருதலைப்பட்ச தடை உத்தரவு அவரினால் பிறப்பிக்கப்பட்டதாகவும் கடந்த மாதம் 7 ஆம் திகதி அவரினால் தடை உத்தரவு நீடிக்கப்பட்டதாகவும் கூறி இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை, MTV செனல் தனியார் நிறுவனம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா கடுமையாக ஆட்சேபித்தார். வழக்குத் தரப்பினருக்குத் தேவையான விதத்தில், சிந்தனைக்கு புலப்படும் வகையில், அவர்களின் வழக்கை விசாரிப்பதற்கு நீதிபதிகளைத் தெரிவு செய்வது மிகவும் தவறான முன்னுதாரணம் எனவும் அதன் மூலம் நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மைக்கு குந்தகம் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். கடந்த மாதம் 7 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த வழக்கை கடந்த மாதம் 18 திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மற்றுமொரு மேலதிக, மாவட்ட நீதிபதியொருவர் உத்தரவிட்டு, வழக்கை இலக்கம் ஒன்று நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு விசேட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், அதற்கு முறைப்பாட்டாளர் தரப்பு அந்த வேளையில் எவ்வித ஆட்சேபனையையும் தெரிவிக்கவில்லையெனவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார். அதனால் உரிய நீதிமன்ற செயற்பாட்டைப் பின்பற்றி, மாவட்ட நீதிபதி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் எனவும், முறைப்பாட்டாளர் தரப்பு கோரிக்கை விடுப்பதைப் போன்று, மேலதிக மாவட்ட நீதிபதியிடம் இந்த வழக்கை கொண்டு செல்ல வேண்டாம் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா குறிப்பிட்டார். ஏதாவது ஒரு தரப்பினர் யாரேனுமொரு நீதிபதி, ஏதாவதொரு வழக்கை விசாரிப்பது தொடர்பில் ஆட்சேபனை தெரிவிக்கும் சந்தர்ப்பத்தில், அதனையும் பொருட்படுத்தாமல், அந்த நீதிபதியே அந்த வழக்கை விசாரித்தால், குறித்த நீதிபதி பக்கசார்பானவர் என்ற முடிவுக்கு வர முடியும் என, இரண்டு தரப்பினரதும் கருத்துக்களை செவிமடுத்த நீதிமன்றம் தெரிவித்தது. அந்தக் காரணத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு , இந்த வழக்கை மேலதிக மாவட்ட நீதிபதி சதுன் விதானவிடம் மாற்றுவதாக மாவட்ட நீதிபதி அறிவித்தார். அதன் பின்னர் மேலதிக மாவட்ட நீதிபதி சதுன் விதான முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், இந்த வழக்கு சற்று நேரத்திற்கு முன்னர், இலக்கம் 1 நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், ஜோர்ஜ் ஸ்டூவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, இந்த வழக்கை இந்த நீதிமன்றத்தில் விசாரணை செய்யுமாறு கோரியதாக MTV செனல் தனியார் நிறுவனம் சார்பாக ஆராஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உதித இகலஹேவா தெரிவித்தார். அந்தக் கோரிக்கைக்கு தாம் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்ததாகவும், அந்த எதிர்ப்பை இந்த நீதிமன்றத்திலும் வௌியிடுவதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா குறிப்பிட்டார். கடந்த மாதம் 18 ஆம் திகதி இந்த வழக்கு அழைக்கப்பட்ட போது, இலக்கம் 1 நீதிமன்றத்தில், வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளமையினால், இந்த நீதிமன்றத்தில் அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார். இரண்டு தரப்பினரதும் கருத்துக்களை கருத்திற்கொண்டதன் பின்னர் உகந்த முடிவை அறிவிப்பதற்காக ஜனவரி 13 ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. MTV செனல் தனியார் நிறுவனம் சார்பில் சட்டத்தரணி ஜி.ஜி.அருள்பிரகாசத்தின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா, சட்டத்தரணிகளான ஜீவந்த ஜயதிலக்க, நிரஞ்சன் அருள்பிரகாசம், தமித்த கருணாரத்ன, என்.கே.அஷோக்பரன், மியுரு இகலஹேவா உள்ளிட்ட மேலும் சில சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர். முறைப்பாட்டாளர் தரப்பு மற்றும் முறைப்பாட்டு நிறுவனத்தின் தலைவரான திலித் ஜயவீரவின் உரிமைக்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, சட்டத்தரணி ருவந்த குரே ஆகியோர் ஆஜராகியிருந்தனர். ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நீதி அமைச்சராக பதவியேற்பதற்கு முன்னர், அவரது கனிஷ்ட சட்டத்தரணிகளில் மூத்த சட்டத்தரணியாக ருவந்த குரே செயற்பட்டார். இதற்கு முன்னரும் திலித் ஜயவீர, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வேறு ஊடக நிறுவனமொன்றுக்கு எதிராக தடையுத்தரவொன்றைப் பெற்றிருந்தார். அந்த தடையுத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டபோது, திலித் ஜயவீரவின் உரிமைக்காக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியே ஆஜராகியிருந்தார்.

ஏனைய செய்திகள்