1000 ரூபா சம்பளப் பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிவு

by Bella Dalima 07-01-2021 | 8:23 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா சம்பளப் பேச்சுவார்த்தை எவ்வித இணக்கப்பாடுமின்றி முடிவடைந்தது. சம்பள உயர்வு தொடர்பில் இன்று தொழில் அமைச்சில், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 2021 ஜனவரி முதல் 1000 ரூபாவாக அதிகரிக்க முன்மொழிவதாக வரவு செலவுத் திட்ட உரையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்த விடயத்திற்கு அமைவாக இந்தக் கூட்டம் நடைபெற்றது. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட தரப்பினரும், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் உள்ளிட்ட தரப்பினரும் முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிகளும் அமைச்சின் அதிகாரிகளும் இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். இன்றைய பேச்சுவார்த்தை எவ்வித இணக்கப்பாடும் இன்றி முடிவிற்கு வந்ததாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்தார்.
தற்போதைய சம்பளத்தை 920 ரூபா வரைக்கும் உயர்த்துவதற்கே முதலாளிமார் சம்மேளனம் இணங்கியது. எனினும், தொழிற்சங்கங்கள் ஆயிரம் ரூபா சம்பள உய்வை வழங்க வேண்டும் எனவும், 700 ரூபா அடிப்படை சம்பளத்தை 725 ரூபாவாக உயர்த்த வேண்டும் எனவும் அழுத்தமாகக் கூறினார்கள். இது தொடர்பாக நீண்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இறுதியில் அந்த இரண்டு தரப்பினருக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படவில்லை
என நிமல் சிறிபால டி சில்வா கூறினார். தொழில் அமைச்சர் என்ற வகையில், மாற்று வழிகளைக் கண்டுபிடித்து முதலாளிமார் சம்மேளனத்திற்காக புதிய தீர்மானங்களை எடுக்க சட்டமூலத்தை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவைக்கு இந்த நிலைமையை அறிக்கையிட்டு, மாற்று வழி நடவடிக்கைகளை அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தி, அதற்கான அனுமதியைப் பெற்று, அதனூடாக அரசாங்கம் என்ற வகையில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.