சுற்றுலாப் பயணிகள் வருகை: சுகாதார வழிகாட்டல் கோவை

வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கான சுகாதார வழிகாட்டல் கோவை வௌியீடு

by Bella Dalima 07-01-2021 | 5:40 PM
Colombo (News 1st) வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பிலான சுகாதார வழிகாட்டல் கோவை, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தனவின் அனுமதியின் கீழ் வௌியிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளுக்கு அமைய, நாட்டிற்கு வருகை தரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் தமது விமானத்தில் இருந்து தரையிறங்கிய 96 மணித்தியாலங்களுக்குள் PCR பரிசோதனை மேற்கொண்டு, கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லையென்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். சுற்றுலாப் பயணிகள் நாட்டில் 7 நாட்கள் வரை தங்கியிருந்தால், அவர்கள் இரண்டு PCR பரிசோதனைகளுக்கு பணம் செலுத்த வேண்டும் என்பதுடன், 7-க்கும் அதிக நாட்கள் தங்கியிருந்தால் மூன்று PCR பரிசோதனைகளுக்கு பணம் செலுத்த வேண்டும். எவ்வாறாயினும், வர்த்தக விசா வசதியின் கீழ் வருகை தருவோர் இந்த சுகாதார விதிமுறைகளை பின்பற்றத் தேவையில்லை. நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து மீண்டும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன், அவர்கள் விரும்பும் ஹோட்டல்களில் 14 நாட்கள் தங்கியிருக்க முடியும். இந்த 14 நாட்களில் சுற்றுலாப் பயணிகள் ஹோட்டல் வளாகத்தில் இருந்து வௌியேற முடியாது. நாட்டிற்கு வந்ததன் பின்னர் மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனையில், அவர்கள் தொற்றுக்குள்ளாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால் தங்குமிடத்தை வேறு ஹோட்டலுக்கு மாற்றிக்கொள்ள முடியும். COVID ஒழிப்பு தேசிய செயலணி, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் சுகாதார அமைச்சினால் அனுமதியளிக்கப்பட்டுள்ள 14 சுற்றுலா வலயங்களில் மாத்திரம் சுற்றுலாவில் ஈடுபட பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும். பயணிகளின் PCR பரிசோதனை முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நடைமுறைக்கு அனுமதியளிக்கப்படும். இந்த பரீட்சார்த்த திட்டத்திற்கமைய, ஒரு நாளில் நாட்டிற்குள் 300 பயணிகள் மாத்திரமே அனுமதிக்கப்படுவர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. வாரத்தில் ஒரு நாள் தவிர்ந்த ஏனைய நாட்களில் ஒரு விமானம் மாத்திரமே நாட்டிற்குள் அனுமதிக்கப்படும் என்பதுடன் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் இரு விமானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கான சேவைகளில் ஈடுபடும் ஊழியர்கள் பணி நிறைவில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். இந்த பரீட்சார்த்த திட்டம் முற்றாக சுகாதார அமைச்சு மற்றும் சுற்றுலா அமைச்சினால் கண்காணிக்கப்படவுள்ளது.

ஏனைய செய்திகள்