by Bella Dalima 07-01-2021 | 3:35 PM
Colombo (News 1st) அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சியை ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள ஜோ பைடன் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
அமெரிக்க காங்கிரஸை சூழ்ந்து அவர்கள் மேற்கொண்ட கலகத்திற்கே இந்த கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி ட்ரம்ப் முன்வர வேண்டுமெனவும் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த நவம்பரில் நடைபெற்ற தேர்தலின் முடிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களை Capitol நகரில் பேரணி செல்லுமாறு ஜனாதிபதி ட்ரப்ம் வலியுறுத்தியிருந்தார்.
இதனையடுத்தே, குறித்த கலகம் தோற்றம் பெற்றிருந்தது.
எவ்வாறாயினும், ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைந்து வீடுகளுக்கு செல்லுமாறு பின்னர் அவர் கோரியிருந்தார்.
இந்த வன்முறைகள், கலகங்களினால் ஒத்திவைக்கப்பட்ட அமெரிக்க காங்கிரஸின் இரு சபைகளினதும் இணைந்த அமர்வு மீள ஆரம்பமாகியது.
இந்த அமர்வில் ஜோ பைடனின் ஜனாதிபதித் தேர்தல் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த அமர்வை ஆரம்பித்து உரையாற்றிய துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், அமெரிக்க காங்கிரஸின் வரலாற்றில் இன்றைய தினம் இருண்ட நாள் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதியினால் பேஸ்புக் கணக்கில் எவ்வித பதிவும் இட முடியாது என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
கலவரத்தை தொடர்ந்து தனது ஆதரவாளர்களை திரும்பிச் செல்லுமாறு ட்ரம்ப் வேண்டுகோள் விடுக்கும் காணொளியை பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் அகற்றியுள்ளன.
டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கும்12 மணித்தியாலங்களுக்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியும் ட்ரம்பின் குடியரசுக் கட்சியை சேர்ந்தவருமான ஜோர்ஜ் புஷ் உள்ளிட்ட ஏனைய உலக தலைவர்கள் இந்த தாக்குதலை கடுமையாகக் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில், வௌ்ளை மாளிகையின் பதில் ஊடக செயலாளர் சாரா மெத்தியூஸ் தமது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
தலைநகரில் ஏற்பட்ட இந்த கலவரத்தை தொடர்ந்து அவர் பதவி விலகியுள்ளார்.
தமது நாட்டிற்கு அமைதியான அதிகாரப்பகிர்வே தேவையாகவுள்ளதாக சாரா மெத்தியூஸ் தெரிவித்துள்ளார்.
கலவரத்தினால் தாம் மிகவும் நெருக்கடியை சந்தித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அமெரிக்க முதற்பெண்மணி மெலனியா ட்ரம்ப்பின் சிரேஷ்ட ஊழியர் ஒருவர் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
கலவரம் காரணமாகவே அவர் இராஜினாமா செய்தாரா என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த வெற்றியை ஏற்று சான்றிதழ் தராமல் தேர்தல் முடிவுகளை நிராகரிக்குமாறு துணை ஜனாதிபதி மைக் பென்ஸை வலியுறுத்தி வருகிறார்.