COVID-19 தடுப்பூசி ஏற்றுமதியின் போது இலங்கைக்கு முன்னுரிமை வழங்கப்படும்: ஜெய்சங்கர் தெரிவிப்பு

by Bella Dalima 06-01-2021 | 6:39 PM
Colombo (News 1st) இந்தியாவில் தயாரிக்கப்பட்ட COVID-19 தடுப்பூசி ஏற்றுமதியின் போது இலங்கைக்கு முன்னுரிமை அளிக்கப்படுமென இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை இன்று சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் தயாரிக்கப்படும் COVID-19 தடுப்பூசியின் சிகிச்சை தரம் தொடர்பில் மதிபீடு செய்யப்பட்டதன் பின்னர் அவற்றை பெற்றுக்கொள்ள விருப்பமுள்ளதாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார். இந்து - ஶ்ரீலங்கா இடையிலான தொடர்புகளின் பிரதிபலிப்புகளை உச்சபட்சமாக மேம்படுத்துவதற்கும் ஜனாதிபதி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கிடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒத்துழைப்புடன் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள செயற்றிட்டங்களுக்கு மேலாக, ஒத்துழைப்புகளை மேலும் விரிவுபடுத்தக்கூடிய சில துறைகள் தொடர்பில் கலந்துரையாடலின் போது அடையாளம் காணப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம், திரவியங்கள், காற்றாலை மின்னுற்பத்தி திட்டம், வீடமைப்பு, வீதி புனரமைப்பு, விவசாய அபிவிருத்தி மற்றும் ஆய்வு, தொடர்பாடல் தொழில்நுட்பம், மாற்று சக்திக்கான அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் அவற்றுள் அடங்குகின்றன. உரிய முறையில் கல்வி அறிவை பெற்ற இளம் தலைமுறையினர் நாட்டில் வசிப்பதால், அவர்களுக்கு பல்வேறு துறைகளில் தொழில் பயிற்சிகளை வழங்குவதற்கு இந்தியாவின் ஒத்துழைப்புகளை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார். இலங்கையர்களுக்கு தேவையான உரிய தொழிற்பயிற்சியை வழங்க தயாராகவுள்ளதாக இந்திய வௌிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். COVID-19 தொற்றினால் வீழச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையை மீண்டும் எழுச்சி பெற செய்வது தொடர்பிலும் இந்த கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்கு இந்தியா, இலங்கை, மாலைத்தீவுகள் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் இணைந்து விரைவில் கலந்துரையாடலை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 13 ஆவது திருத்தம் உள்ளிட்ட அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்விற்கான அர்ப்பணிப்பு, இலங்கையின் சுபீட்சத்திற்கும் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் என இந்திய வௌிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ள இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், வௌிவிகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் ஒன்றிணைந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே இதனை கூறியுள்ளார். வௌிவிவகார அமைச்சில் இந்த ஒன்றிணைந்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்திய வௌிவிவகார அமைச்சர் கருத்து வௌியிட்டார்.