1000 ரூபா சம்பளம் கோரி மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுப்பு

by Bella Dalima 06-01-2021 | 7:12 PM
Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஹட்டன் மல்லியப்பூ சந்தியில் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் பங்கு பற்றியிருந்ததுடன், அரசியல்வாதிகளும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம், பொருட்களின் விலையேற்றத்திற்கு ஏற்ப, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனிடையே, 1000 ரூபா அடிப்படை சம்பள அதிகரிப்பு கோரி மஸ்கெலியாவில் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்புப் பட்டி அணிந்து தமது எதிர்ப்பினை வௌியிட்டிருந்தனர். மஸ்கெலியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார், சொன்ன வார்த்தையை காப்பாற்ற முடியாத அரசாங்கம் வக்கில்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார். இதனிடையே சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழில் அமைச்சில் கடந்த மாதம் 21 ஆம் திகதி நடைபெற்ற முதற்கட்ட கலந்துரையாடலின் போது டிசம்பர் 31 ஆம் திகதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், கொரோனா தொற்றுடன் ஏற்பட்ட நிலைமையால் கடந்த 31 ஆகதி நடைபெறவிருந்த கலந்துரையாடல் நாளை வரை ஒத்திவைக்கப்படுவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்திருந்தது.