மாத்தளை மாநகர சபையின் புதிய மேயராக சந்தனம் பிரகாஷ் தெரிவு

by Staff Writer 06-01-2021 | 7:45 PM
Colombo (News 1st) மாத்தளை மாநகர சபையின் புதிய மேயராக சந்தனம் பிரகாஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மாத்தளை மாநகர சபையின் புதிய முதல்வரை தெரிவு செய்வதற்காக இன்று இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது 21 ஆசனங்கள் கொண்ட மாத்தளை மாநகர சபையில் இன்றைய அமர்வின் போது இரண்டு உறுப்பினர்கள் பங்கேற்றிருக்கவில்லை. இந்த நிலையில், நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் சந்தனம் பிரகாஷிற்கு ஆதரவாக 10 வாக்குகளும் எதிர்த்து போட்டியிட்ட பாலித்த ஜயசேகரவிற்கு 9 வாக்குகளும் கிடைத்திருந்தன. இதன் பிரகாரம், சந்தனம் பிரகாஷ் மாத்தளை மாநகர சபையின் மேயராக தெரிவு செய்யப்பட்டார். மாத்தளை மாநகரின் மேயர் பதவியிலிருந்து டல்ஜித் அலுவிஹார இடைநிறுத்தப்பட்டு அவருக்கெதிரான விசாரணைக்கு விசேட குழு நியமிக்கப்பட்டது. இந்த விசாரணைகளின் போது அவர் மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் பல சரத்துக்களை மீறி செயற்பட்டுள்ளமை உறுதியானதை அடுத்து, பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக கடந்த மாதம் 2 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினரான சந்தனம் பிரகாஷ் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியிருந்தார். தற்போது அவர் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.