கொரோனா தொற்றாளர்கள் பற்றிய விபரம்

கொரோனா தொற்றாளர்கள் பற்றிய விபரம்

by Chandrasekaram Chandravadani 06-01-2021 | 9:40 AM
Colombo (News 1st) நேற்றைய தினம் (05) முதல் இன்று (06) காலை வரையான 24 மணி நேரத்திற்குள் நாட்டில் புதிதாக 484 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி தெரிவித்துள்ளது. இவர்களுள் ஐவர் வௌிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களாவர். ஏனையவர்களுள் கொழும்பு மாவட்டத்தில் 121 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 109 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 பேரும் அம்பாறை மாவட்டத்தில் 23 நபர்களும் புத்தளம் மாவட்டத்தில் ஐவரும் யாழ் மாவட்டத்தில் 06 நபர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் இருவரும் பதுளை மாவட்டத்தில் 03 நபர்களும் நேற்று புதிதாக தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களாவர். கொழும்பு - கொம்பனித்தெரு பிரதேசத்தில் 06 பேர், கொள்ளுப்பிட்டி பகுதியில் 07 நபர்கள், கிருலப்பனை பிரதேசத்தில் 07 பேர், பொரளையில் நால்வர், தெமட்டகொடை பிரதேசத்தில் ஐவர், மருதானையில் ஒருவர், கிரேண்ட்பாஸ் பகுதியில் இருவர், மட்டக்குளி பகுதியில் 38 பேர் அடங்கலாக கொழும்பு மாவட்டத்தில் 121 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹேகித்தையில் ஒருவரும் களனி பகுதியில் இருவரும் நீர்கொழும்பு பிரதேசத்தில் ஒருவரும் வத்தளை பிரதேசத்தில் ஒருவரும் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 109 பேருள் அடங்குகின்றனர். இன்று (06) காலை வரையான காலப் பகுதிக்குள் நாட்டில் 45,726 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 38,262 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மாத்தளை மற்றும் களுத்துறை ஆகிய பிரதேசங்களில் நேற்று இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகின. இதனையடுத்து, நாட்டில் உறுதி செய்யப்பட்டுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 217 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டிலுள்ள 75 கொரோனா தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 5,037 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்றைய தினத்தில் மாத்திரம் 10,774 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக வௌிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 206 பேர் இன்று காலை தாயகம் திரும்பியுள்ளனர். இவர்கள் மாலைதீவு, கட்டார் மற்றும் துபாய் ஆகிய நாடுகளிலிலிருந்து நாடு திரும்பியுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி குறிப்பிட்டுள்ளது.