by Staff Writer 06-01-2021 | 7:37 PM
Colombo (News 1st) இலங்கையின் புதிய அரசியலமைப்பு தொடர்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு வௌியிடப்பட்டுள்ளது.
ஒன்றுபட்ட நாடாக நிலைபேறான சமாதானத்தையும் சுபீட்சத்தையும் நோக்கி நகர வேண்டுமாயின், புதிய அரசியலமைப்பொன்று அவசியம் என கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கூட்டாக இந்த நிலைப்பாட்டினை அறிவித்துள்ளனர்.
நாட்டின் பல்லின, பன்மொழி மற்றும் பல்மதத் தன்மை உறுதிப்படுத்தப்படுவதும் பாதுகாக்கப்படுவதும் போற்றப்படுவதுமான ஓர் ஐக்கிய, பிரிபடாத, பிரிக்க முடியாத நாட்டிற்கான தமது பற்றுறுதியை நாட்டிற்கு வழங்குவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசியலமைப்பின் அடிப்படை அம்சமும் அதன் அடிப்படைக் கட்டமைப்பும் பெரும்பான்மையினராக இருப்பினும் சிறுபான்மையினராக இருப்பினும் இலங்கை மக்களுக்கிடையிலான அடிப்படை இணக்கப்பாட்டை பிரதிபலிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அரசியலமைப்பில் விதித்துரைக்கப்பட்ட ஆட்சி அதிகாரங்களை பிரயோகிக்க வேண்டிய மத்திய மற்றும் பிராந்திய நிறுவனங்களைக் கொண்ட ஒரு சுதந்திரமான, இறையாண்மைமிக்க சுயாதீனமான மற்றும் ஐக்கிய குடியரசாக இலங்கை அங்கீகரிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அந்த பிராந்தியங்களில் ஒன்று வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையினராக வாழும் ஆள் புலத்திற்கானதாக அமைதல் வேண்டும் எனவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை இலங்கை முழுவதும் அரச கரும மொழிகளாகவும் நிர்வாக மொழிகளாகவும் அரசியலமைப்பு அங்கீகரிக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரஜைகள் தாம் தெரிவு செய்யும் மொழியில் அரசாங்கத்துடன் நேரடியாகவோ அல்லது கடிதம் மூலமோ தொடர்பாடல் கொள்வதற்கான உரிமை இருக்க வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் கூறியுள்ளனர்.
சம்பிரதாயபூர்வமான ஒரு ஜனாதிபதியை அரசியலமைப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் பிரதம மந்திரி அமைச்சரவையின் தலைவராக இருக்க வேண்டும் எனவும் கூட்டமைப்பு யோசனை முன்வைத்துள்ளது.
மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒரு சபையையும் பிராந்தியங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய இரண்டாவது சபையையும் கொண்டதாக இரு சபை சட்டவாக்கத்துறைக்கு அரசியலமைப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும்.
காணி அதிகாரம் பகிரப்பட வேண்டியதன் அவசியத்தையும் கூட்டமைப்பின் தலைவர்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தௌிவுபடுத்தியுள்ளனர்.