ஐவருக்கு கொரோனா: மன்னார் – எருக்கலம்பிட்டி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது

ஐவருக்கு கொரோனா: மன்னார் – எருக்கலம்பிட்டி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

06 Jan, 2021 | 8:05 pm

Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளான ஐவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, மன்னார் – எருக்கலம்பிட்டி பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

எருக்கலம்பிட்டியில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து குடும்ப உறுப்பினர்கள் 6 பேர் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நோயாளர்கள் திருமண வீட்டிற்கு சென்று வந்தார்கள் என்பதன் அடிப்படையில், நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் T.விநோதன் குறிப்பிட்டார்.

இதேவேளை, வட மாகாணத்தில் நேற்று 496 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எருக்கலம்பட்டியில் இனங்காணப்பட்ட ஐவர் தவிர, வவுனியாவில் ஐவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொறியியல் பிரிவில் கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு மாணவர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால், 122 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ். மாவட்டத்தில் உடுவில் சுகாதார அதிகாரி பிரிவிலிருந்து மருதனார் மடம் தொற்று பரம்பலுடன் தொடர்புடைய ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 11 பேர் கொழும்பிற்கு சென்று விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது, அவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் முன்னர் அவர்கள் கிளிநொச்சிக்கு தப்பிச் சென்றுள்ளனர். அவர்களில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு இன்று முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. அங்கு
11 ஆம் திகத்திக்கு பின்னர் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கம்பளை – தொலுவ சுகாதார பிரிவிற்குட்பட்ட கம்பளவத்த பிரதேசத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொலுவ பொது சுகாதார பரிசோதகர் நவரத்தின பிரதீப் குறிப்பிட்டார்.

ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 4 பேருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்