ETI, ஸ்வர்ணமஹால் பணிப்பாளர்களுக்கு எதிராக விசாரணை

ETI, ஸ்வர்ணமஹால் பணிப்பாளர்களுக்கு எதிராக குற்றவியல் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சட்ட மா அதிபர் உத்தரவு

by Staff Writer 05-01-2021 | 6:36 PM
Colombo (News 1st) ETI மற்றும் ஸ்வர்ணமஹால் நிறுவனத்தின் பணிப்பாளர்களுக்கு எதிராக குற்றவியல் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். 13.7 மில்லியன் பணத்தை சட்டவிரோதமாக பெற்றுக்கொண்டமை உள்ளிட்ட நிதி முறைகேடு தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன உறுதிப்படுத்தினார். அத்துடன், அனுமதியற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டமை தொடர்பில் ஸ்வர்ண மஹால் நகையகத்தின் பணிப்பாளருக்கு எதிராக சட்ட மா அதிபரினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு இணங்க இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார். ETI நிதி நிறுவனம் 6,480 பில்லியன் வைப்பு பணத்துடன் இரகசிய கணக்குகளை சட்டவிரோதமாக பேணியுள்ளதுடன், ஸ்வர்ணமஹால் நகையகம் மத்திய வங்கியின் ஒப்புதல் மற்றும் பதிவின்றி 7.2 பில்லியன் பண வைப்புகளை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதற்கமைய, ETI நிதி நிறுவனம் மற்றும் ஸ்வர்ணமஹால் நகையகத்தின் பணிப்பாளர்களாக செயற்பட்ட ETI நிதி நிறுவனத்தின் தலைவர் காலஞ்சென்ற சோமா எதிரிசிங்க, ஜீவக ஹேமால் எதிரிசிங்க மற்றும் அசங்க ஶ்ரீமால் எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய சட்ட மா அதிபர் தீர்மானித்துள்ளார்.