நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை

நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை

by Chandrasekaram Chandravadani 05-01-2021 | 7:23 AM
Colombo (News 1st) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சபரகமுவ, மேல் மற்றும் வட மேல் மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 100 மில்லிமீற்றருக்கு கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படும் சந்தரப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடற்பிராந்தியங்களில் காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டை சூழவுள்ள ஏனைய கடற்பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. சிலாபம் தொடக்கம் புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றருக்கும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும் என திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.