கொரோனா: 'உடல்களை அடக்கம் செய்வதில் சிக்கல் இல்லை'

கொரோனாவினால் உயிரிழந்தோரை அடக்கம் செய்வதில் பிரச்சினை இல்லை - இலங்கை மருத்துவ சபை

by Staff Writer 03-01-2021 | 9:37 PM
Colombo (News 1st) COVID - 19 தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி அடக்கம் செய்வதில் பிரச்சினை இல்லையென இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது. அந்த சபையின் தலைவராக விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன செயற்படுகின்றார். ஒருவர் உயிரிழந்த பின்னர் PCR பரிசோதனையில் COVID - 19 தொற்று உறுதி செய்யப்பட்டாலும், அதன் பின்னர் உடலில் வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பு இல்லையென இலங்கை மருத்துவ சபை சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 31 ஆம் திகதி விசேட நிபுணர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானத்தை எட்டியதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது. தற்போது நிலவும் விஞ்ஞானபூர்வ தரவுகளை மாத்திரம் அடிப்படையாக வைத்து இலங்கை மருத்துவ சபை சில சிபார்சுகளை முன்வைத்துள்ளது. அவற்றில் சில...  1- COVID - 19 தொற்று சுவாசக்குழாய் ஊடாக மாத்திரமே பரவுவதுடன், வயிறு மற்றும் குடல் மூலம் இந்த வைரஸ் இதற்கு முன்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பரவியதாக தகவல் பதிவாகவில்லை 2 - உயிர் உள்ள கலத்திலேயே வைரஸினால் உயிர் வாழ முடியும் என்பதனால் சடலங்களில் குறிப்பிடத்தக்க நேரத்திற்கு வாழ்வதற்கான சந்தர்ப்பம் மிகவும் குறைவானது 3 - பிரேத பரிசோதனையின் போது PCR மூலம் அவர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டாலும், அவர் மூலம் மற்றுமொருவருக்கு வைரஸ் தொற்றும் என முடிவுக்கு வர முடியாது 4 - கொரோனா நோயாளர்களின் மலம், சலம் போன்றவை நீர் கட்டமைப்பில் சேர்வதன் மூலம் ஏற்படும் பாதிப்பு, உடலை அடக்கம் செய்வதன் மூலம் ஏற்படக்கூடிய பாதிப்பைவிட மிகவும் அபாயரமானது 5 - இந்த வைரஸின் பகுதிகள் நிலத்தடி நீரில் இதற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதிலும், அதன் மூலம் வைரஸ் பரவிய எந்த சம்பவமும் பதிவாகவில்லை. அதிகளவில் ஆய்வு செய்யப்பட்ட இது போன்ற வைரஸ் அதாவது இன்புலுவென்ஸா மற்றும் சார்ஸ் வைரஸ் என்பனவும் இவ்வாறு பரவியமைக்கான எந்த ஆராதமும் இல்லை 6 - டென்மார்க்கில் கொவிட் காரணமாக கொலை செய்யப்பட்ட கீரி இனமொன்றில் அதிகமானவற்றை புதைத்து, மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டமைக்கு காரணம் அந் நாட்டில் நிலத்தடி நீர் மாசடைந்தமையினால் அல்லவெனவும் அந்த கீரிகளின் உடல்கள் பழுதடைந்தமையால் ஏற்பட்ட நைட்ரஜன் கழிவு காரணமாக அதனை அண்மித்த பகுதியில் காணப்பட்ட நீர் ஊற்றுகள் மாசடைந்தமையினாலே அந்த நிலமை ஏற்பட்டுள்ளது 7 - நீர் மூலம் அதிகளவில் பரவும் கொலரா போன்ற நோயால் பீடிக்கப்பட்டவர்களின் உடல்களையும் அடக்கம் செய்வதற்கு அனைத்து சந்தர்ப்பங்களிலும் இடமளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்