ஊவதென்னே சுமன தேரருக்கு பொது மன்னிப்பு

ஊவதென்னே சுமன தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு

by Staff Writer 03-01-2021 | 2:03 PM
Colombo (News 1st) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஊவதென்னே சுமன தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இந்த தீர்மானம் நீதி அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக T56 ரக துப்பாக்கிகள் 02 மற்றும் 210 தோட்டாக்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக காணப்பட்ட மாளிகாவத்தை போதிராஜாராம விகாரையின் விஹாராதிபதி ஊவதென்னே சுமன தேரருக்கு கடந்த வருடம் ஜூன் மாதம் முதலாம் திகதி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை வைத்திருந்தமை தொடர்பில் பிரதிவாதியான தேரருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதை அடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே இதற்கான உத்தரவை பிறப்பித்திருந்தார். 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நெருங்கிய நிலையில், ஜனவரி இரண்டாம் திகதி குறித்த விகாரையை சுற்றிவளைத்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளும் ஆயுதங்களை கைப்பற்றியிருந்தனர்.