இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஐவர் தனிமைப்படுத்தலில்

COVID விதி மீறல்: அவுஸ்திரேலியாவில் 5 இந்திய கிரிக்கெட் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

by Bella Dalima 02-01-2021 | 7:38 PM
Colombo (News 1st) அவுஸ்திரேலியாவில் COVID விதிகளை மீறியதாகத் தெரிவித்து ரோஹித் ஷர்மா உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் அணியின் ஐந்து வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் இவர்கள் எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதும் கேள்விக்குறியாகியுள்ளது. ரோஹித் ஷர்மா உள்ளிட்ட ஐந்து வீரர்கள் மெல்பேர்னில் விருந்துபசாரமொன்றில் கலந்துகொண்ட காணொளி, சமூக வலைத்தளங்களில் வௌியானது. இதனைத் தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ரோஹித் ஷர்மா, ரிஷப் பான்ட், சுப்மன் கில், பிரித்வி ஷோ மற்றும் நவ்தீப் சய்னி ஆகியோர் குழாத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், குறித்த வீரர்கள் கடுமையான நெறிமுறைகளின் கீழ் பயிற்சிகளில் ஈடுபட அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீரர்களினால் நெறிமுறைகள் மீறப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையும் முன்னெடுத்துள்ளன. IPL போட்டிகளின் போது உபாதைக்குள்ளான ரோஹித் ஷர்மா, அவுஸ்திரேலியாவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது தொடர்களையும், டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டிகளையும் இழந்திருந்தார். கடந்த மாதம் உடல் தகுதியை நிரூபித்த பின்னர், தனியாக அவுஸ்திரேலியாவிற்கு பயணமான அவர் 21 நாட்களின் பின்னர் நேற்று இந்திய அணியுடன் இணைந்துகொண்டிருந்தார். இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 7 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.