புதிய வகை கொரோனா வைரஸ் பரவாதிருக்க நடவடிக்கை

புதிய வகை கொரோனா வைரஸ் இலங்கைக்குள் பரவாதிருக்க நடவடிக்கை

by Staff Writer 02-01-2021 | 2:40 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா வைரஸின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பில் ஆய்வுக்கூடங்களில் விசேட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார். பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் இலங்கைக்குள் பரவாதிருப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். இதேவேளை, நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 43,854 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 36,155 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். நாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளரால் நேற்று (01) உறுதிப்படுத்தப்பட்டன. இதற்கமைய, இலங்கையில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளது. அம்பாறை-ஆலையடிவேம்பு, கொழும்பு 14, அகலவத்தை மற்றும் தர்காநகர் பகுதிகளிலேயே இந்த கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதேவேளை, வட மாகாணத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மாகாண சுகாதா சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஆறுமுகம் கேதீஸ்வரன் குறிப்பிட்டார்.