குருநாகல் ரஜபிஹில்ல பூங்காவில் நூற்றாண்டு பழைமையான 32 மரங்கள் வெட்டி அழிப்பு

by Bella Dalima 02-01-2021 | 8:07 PM
Colombo (News 1st) அபிவிருத்தி நாட்டிற்கு அவசியமானது என்ற போதும், பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் சீர்குலைக்கும் வகையில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி எந்தவொரு நாட்டிற்கும் உகந்ததல்ல. நகர அலங்கரிப்பு மற்றும் சில அபிவிருத்தித் திட்டங்களால் அழிவடைந்த தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் குறித்து தொடர்ச்சியாக நியூஸ்ஃபெஸ்ட் வௌிக்கொணர்ந்து வருகிறது. குருநாகல் நகர மத்தியிலுள்ள தொன்மைவாய்ந்த ''ரஜபிஹில்ல'' என அழைக்கப்படும் பூங்காவிற்கு ஏற்பட்டுள்ள அழிவு மற்றுமொரு அபத்தம். குருநாகலுக்கு வருகை தரும் பெரும்பாலானவர்கள் இளைப்பாறுவதற்கு செல்லும் இடங்களில் ரஜபிஹில்ல பூங்காவும் பிரதானமானது. இங்குள்ள நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த மரங்கள் தற்போது வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன. இந்த பழைமை வாய்ந்த ரஜபிஹில்ல பூங்காவை இரண்டு கட்டங்களாக அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதன் முதற்கட்டமாக மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணி தனியார் நிறுவனமொன்றிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வேப்பமரம் அடங்கலாக 32 மரங்களை வெட்டி வீழ்த்தியுள்ளனர். 28 மரங்களை மாத்திரம் வெட்டி அப்புறப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும் தற்போது 32 மரங்கள் வெட்டி வேருடன் பிடுங்கி எறியப்பட்டுள்ளன. இதனிடையே, பூங்காவிலிருந்த தொன்மை வாய்ந்த தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த மண்டபமொன்றும் முற்றுமுழுதாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
இந்த மண்டபத்தின் கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்களை இந்தக் காலத்தில் எங்கும் தேடிக் கண்டுபிடிக்க முடியாது. இவை எல்லாம் அந்தக் காலத்தில் கைவினைப் பொருட்களைப் போன்று உருவாக்கப்பட்டவை. இயந்திரங்கள் பயன்படுத்தாமல் தயாரிக்கப்பட்டவை. இதனைப் பார்க்கும் எவரும் மனதார கவலைப்படுவார்கள்
என அங்கிருந்த ஒருவர் குறிப்பிட்டார்.
இங்கு நூற்றாண்டு பழமைவாய்ந்த மரங்களே இருந்தன. மக்கள் பிரதிநிதிகள் தமது பொறுப்புகளை தவறவிட்டுள்ளார்கள்
என அந்நபர் மேலும் கூறினார். இதேவேளை, குறித்த இடத்தை கண்காணிப்பதற்கு வடமேல் மாகாண சுற்றாடல் அமைப்பின் ஏற்பாட்டாளர் ஜயந்த விஜேசிங்க வருகை தந்திருந்தார்.
தேடி ஆராய்ந்து பார்த்து உரிய கண்காணிப்புகளை மேற்கொண்டு அனுமதியுடன் பணிகளை முன்னெடுத்திருக்க வேண்டும்
என அவர் குறிப்பிட்டார்.
குருநாகல் நகர மத்தியிலிருந்த புவனேக இராஜ சபை என நம்பப்பட்ட தொல்பொருள் கட்டடம் இதற்கு முன்னர் இடித்து அழிக்கப்பட்டது. அதேபோன்று, இன்று குருநாகல் நகருக்குள் இருக்கும் ஒரேயொரு இயற்கை பூங்காவான ரஜ பீல்லவும் அழிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் இடம் அழிக்கப்படும் போது நாம் குரல் கொடுப்பதை கவனத்திற்கொண்டு செயற்பட்டிருந்தால் இன்று இதுபோன்ற அழிவுகள் ஏற்பட்டிருக்காது
என குருநாகல் வில்கம்தெமட்டவ விகாரையின் விகாராதிபதி திஸ்ஸ ஹமனானந்த தேரர் குறிப்பிட்டார். இது தொடர்பாக குருநாகல் மாநகர சபையிடம் வினவியபோது, நாளை (03) ஊடக சந்திப்பொன்றை நடத்தி விளக்கமளிப்பதாகக் கூறப்பட்டது.