இந்திய பிரஜைகளுக்கு இலவச COVID தடுப்பூசி

இந்திய பிரஜைகளுக்கு இலவச COVID தடுப்பூசி: இன்று ஒத்திகை

by Bella Dalima 02-01-2021 | 8:35 PM
Colombo (News 1st) AstraZeneca மற்றும் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் பங்களிப்பில் தயாரிக்கப்பட்ட COVID-19 தடுப்பூசியை அவசர நிலைமைகளின் போது பயன்படுத்துவதற்கு இந்தியா அனுமதி அளித்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவிற்கு அடுத்ததாக, அதிக கொரோனா நோயாளர்கள் பதிவான நாடாகவுள்ள இந்தியாவில் அவசர நிலைமைகளில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட முதலாவது COVID-19 தடுப்பூசி இதுவாகும். அதற்கமைய, குறித்த தடுப்பூசி இறுதிக்கட்ட அனுமதிக்காக இந்திய ஔடத நிர்வாக ஆணையாளரிடம் அனுப்பப்பட்டுள்ளது. இந்திய சனத்தொகை 1.35 பில்லியனாகவுள்ளதுடன், அவர்களில் 300 மில்லியன் பேருக்கு இந்த வருடத்தின் முதல் 6 அல்லது 8 மாதங்களுக்குள் குறித்த தடுப்பூசியை ஏற்ற எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் தடுப்பூசியை வழங்கும் முன்னாயத்த நடவடிக்கை இந்தியாவின் சகல மாநிலங்களையும் உள்ளடக்கி இன்று முன்னெடுக்கப்பட்டது. தடுப்பூசியை வழங்கும் செயற்பாடு தொடர்பாக மதிப்பீடு செய்வது மற்றும் அதன்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கண்டறிவதே, சகல மாநிலங்களினதும் தலைநகரங்களை உள்ளடக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த முன்னாயத்த நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும். தடுப்பூசி விநியோகம், போக்குவரத்து, களஞ்சியப்படுத்தல், தடுப்பூசி ஏற்றுதல், அது தொடர்பான தரவுகளை சேகரித்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் இந்த முன்னாயத்த நடவடிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.