இந்தியா, பிலிபைன்ஸிலிருந்து தேங்காய் இறக்குமதி

இந்தியா, பிலிபைன்ஸ், வியட்நாமிலிருந்து தேங்காய் இறக்குமதி

by Staff Writer 02-01-2021 | 2:24 PM
Colombo (News 1st) தேங்காய் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், அதனுடன் தொடர்புடைய தொழிற்துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை குறைத்துக்கொள்ளும் வகையில் தேங்காய் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தெங்கு அபிவிருத்து அதிகார சபையின் பணிப்பாளர் பி.எதிரிமான்ன தெரிவித்தார். இந்தியா, பிலிபைன்ஸ் மற்றும் வியட்நாமிலிருந்து தேங்காய் இறக்குமதி செய்யவுள்ளதாக அவர் கூறினார். தேங்காய் தட்டுப்பாட்டிற்கு குறுங்கால தீர்வு வழங்கும் நோக்குடன் வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அடுத்த வாரமளவில் நாட்டிற்கு தேங்காய் இறக்குமதி செய்யப்படும் என தெங்கு அபிவிருத்து அதிகார சபையின் பணிப்பாளர் கூறினார். இதேவேளை, தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு தேவையான உலர்ந்த தேங்காய்களை இறக்குமதி செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கடந்த வருடம் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக தேங்காய் செய்கையில் வீழ்ச்சி ஏற்பட்டதுடன், நாட்டில் தேங்காய்க்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் 70 ரூபா தொடக்கம் 100 ரூபா வரை தேங்காய் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.