EPF வழங்காத முதலாளிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

EPF வழங்காத முதலாளிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

by Staff Writer 01-01-2021 | 4:16 PM
Colombo (News 1st) ஊழியர் சேமலாப நிதியத்தை (EPF) வழங்குவதற்கு தவறியுள்ள முதலாளிமாருக்கு இந்த வருடம் எவ்வித மன்னிப்புகளையும் வழங்கப் போவதில்லை என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார். அறிக்கை ஒன்றினூடாக தொழில் அமைச்சு சிவப்பு எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது. சுமார் 12 பில்லியன் ரூபா ஊழியர் சேமலாப நிதி வழங்கப்படவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் 16,000 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தொழில் அமைச்சு கூறியுள்ளது. நீதவான் நீதிமன்றங்களில் காணப்படும் நெருக்கடிகள் காரணமாக இந்த வழக்குகளை விசாரிப்பதில் தாமதம் நிலவுவதாகவும் தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் அந்த முறைப்பாடுகளை தொழிலாளர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி விரைவில் தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் தொழில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதனால் 1958 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தொழில் தருநரிடம் தொழிலுக்கு சென்று 06 மாதங்களுக்குள் குறித்த பணியாளரை ஊழியர் சேமலாப நிதியத்தில் பதிவு செய்தலை சட்டரீதியாக உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.