அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் 11 ஆவது ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வு

அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் 11 ஆவது ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வு

எழுத்தாளர் Staff Writer

01 Jan, 2021 | 8:31 pm

Colombo (News 1st) மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் 11 ஆவது ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வுகள் ஹட்டனிலும் தலவாக்கலையிலும் இன்று (01) நடைபெற்றன.

மலையக மக்கள் முன்னணியின் நிகழ்கால தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் கலந்துகொண்ட ஞாபகார்த்த நிகழ்வு ஹட்டனிலுள்ள தனியார் மண்டபமொன்றில் நடைபெற்றது.

இதன்போது அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் உருவப்படத்திற்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் வே. இராதகிருஷ்ணன் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1,000 ரூபா சம்பள பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்தார்.

கூட்டு ஒப்பந்தத்தில் ஒப்பமிடும் தொழிற்சங்கங்கள் 5 வருடத்தில் இரு தடவைகள் சைன் பண்ணியிருக்காங்க. ஆனாலும் 1000 ரூபா கிடைக்கவில்லை. ராஜபக்ஸவின் அரசாங்கம் 1000 ரூபா தருவதாக தெரிவித்து பாராளுமன்றத்தில் சட்டமூலமாக்கப்பட்டுள்ளது. ஆனால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் அதனை கூட்டு ஒப்பந்தம் ஊடாக செய்ய வேண்டும் என்ற நிலைக்கு மலையக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கூட்டு ஒப்பந்தம் இல்லாமல் மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்ற நிலை வந்துள்ளது. நேற்று முன்தினம் நடந்த பேச்சுவார்ததையில் கொவிட் காரணமாக போக முடியாது என கூட்டு ஒப்பந்தத்தில் சம்பந்தப்படும் தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. சூம் மூலம் செய்திருக்கலாம் ஆனால் அவ்வாறு செய்யாமல் இழுத்தடிப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது

என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வே. இராதகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் மற்றுமொரு நினைவேந்தல் நிகழ்வு தலவாக்கலையிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்றது.

அன்னாரது குடும்பத்தவர்களும் ஆதரவாளர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதன்போது, அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் மகள் சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

1000 ரூபா சம்பள பிரச்சினை தான் இவ்வளவு காலமும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மக்கள் போராடிக் கொண்டு தான் இருக்கின்றார்கள். சம்பள பிரச்சினை மட்டுமல்ல இன்னும் நிறைய பிரச்சினைகள் உள்ளன. தோட்டங்களுக்கு சென்று பார்க்கும் போது தான் அது தெரியும். சம்பளத்தை மட்டும் கொடுத்துவிட்டால் அவர்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது. அதேபோன்று கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. இந்த பேச்சுவாத்தையில் சம்பளம் பற்றி மட்டும் பேசக்கூடாது. தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு தொடர்பில் பேச வேண்டும்

என சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்