மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகின

மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகின

by Staff Writer 31-12-2020 | 6:38 AM
Colombo (News 1st) நேற்றைய தினம் (30) மேலும் 04 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 199 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பை சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (30) உயிரிழந்துள்ளார். COVID - 19 தொற்றினால் ஏற்பட்ட நியூமோனியா மற்றும் மெனின்ஜைடிஸ் நோய் நிலையே மரணத்திற்கான காரணம் என தெரியவந்துள்ளது. கொழும்பு - 10 பகுதியை சேர்ந்த 70 வயதான பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து COVID - 19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அங்கு நேற்று முன்தினம் (29) உயிரிழந்துள்ளார். ஈரல் தொற்று மற்றம் COVID - 19 தொற்றுடன் ஏற்பட்ட குருதி விசமடைவினால் ஏற்பட்ட அதிர்ச்சி நிலை ஆகியவற்றால் இந்த உயிரிழப்பு பதிவாகியுள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொலன்னாவை பிரதேசத்தை சேர்ந்த 50 வயதான ஆண் ஒருவர் COVID - 19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஹோமாகாம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அங்கு நேற்று முன்தினம் (29) மரணமடைந்துள்ளார். COVID - 19 தொற்றுடன் ஏற்பட்ட உக்கிர சிறுநீரக தொற்று மற்றும் அதிக இரத்த அழுத்தத்துடன் ஏற்பட்ட இருதய நோய் நிலை ஆகியன அவரது மரணத்திற்கான காரணம் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு - 15 பகுதியை சேர்ந்த 66 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் (29) உயிரிழந்துள்ளார். COVID - 19 தொற்று மற்றும் உக்கிரமான நீரிழிவு நிலை ஆகியவற்றால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, நேற்றைய தினம் 636 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனடிப்படையில், நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 42,702 ஆக பதிவாகியுள்ளது. இவர்களில் இதுவரை 34,623 பேர் தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், 7880 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.