மஹர மோதல்: ஆய்வறிக்கை அடுத்த வாரம் அமைச்சரவையில்

மஹர சிறை கலவரம்: ஆய்வறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்த திட்டம்

by Staff Writer 31-12-2020 | 1:40 PM
Colombo (News 1st) மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவினால் வழங்கப்பட்ட அறிக்கையிலுள்ள விடயங்களை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு திட்டமொன்று தயாரிப்பதாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னே தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவினரின் அறிக்கை, குழுவின் தலைவர் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் குசலா சரோஜினி வீரவர்தனவினால் நேற்று மாலை நீதியமைச்சர் அலி சப்ரியிடம் வழங்கப்பட்டுள்ளது. குழுவின் ஏனைய உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி. சில்வா, நீதியமைச்சின் மேலதிக செயலாளர் ரோஹன ஹப்புகஸ்வத்த, முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி ஜயசிங்க, ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் டீ.ஆர்.எல். ரணவீர ஆகியோரும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர். கடந்த மாதம் 29ஆம் திகதி இந்த குழு நியமிக்கப்பட்டிருந்ததுடன், சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.