தமிழரசுக் கட்சிக்குள் கருத்து முரண்பாடு

by Staff Writer 31-12-2020 | 5:50 PM
Colombo (News 1st) யாழ். மாநகர சபை மேயர் தேர்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தோல்வியடைந்ததை அடுத்து தமிழரசுக் கட்சிக்குள் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது. யாழ். மாநகர சபை மேயர் தேர்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோல்வியடைந்தமைக்கான காரணங்களை சுட்டிக்காட்டி இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதி பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோல்வியுற்றால், மேயர் இராஜினாமா செய்ய வேண்டியது ஒரு ஜனநாயக விழுமியம் மட்டுமல்லாமல், அதுவொரு ஜனநாயக மரபாக இருந்து வருவதாக கடிதத்தில் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாகவே இராஜினாமா செய்தவரான ஆர்னோல்ட்டைத் தவிர வேறொருவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக தெரிவு செய்ய வேண்டும் என்பதை திட்டவட்டமாக தாம் கூறியிருந்ததாகவும் எம்.ஏ.சுமந்திரன் தனது கடிதத்தில் நினைவுகூர்ந்துள்ளார். இராஜினாமா செய்தவர்களை மீளவும் வேட்பாளர்களாக நிறுத்தினால், தமது கட்சி அதை எதிர்க்கும் என்று தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பகிரங்கமாக அறிவித்திருந்தமையும் ஜனநாயக விழுமியத்தின் அடிப்படையிலான அறிவிப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரினதும் கருத்திற்கு மாறாக மாவை சேனாதிராசா தன்னிச்சையான, ஜனநாயக விரோத, சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபடும் வகையில், முதல்வர் வேட்பாளராக இமானுவேல் ஆர்னோல்டை மீண்டும் நிறுத்தியதன் காரணமாகவே மாநகர சபை தலைமையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இழந்ததாக எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். இதனால் ஏற்படும் கட்சியின் பின்னடைவிற்கும் மாவை சேனாதிராஜா முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரிடம் இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். தாம் தன்னிச்சையாக முடிவு எடுத்ததாக சுமந்திரன் கூறும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக மாவை சேனாதிராஜா பதிலளித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சியின் கீழ் இருந்த யாழ். மாநகர சபையின் புதிய மேயராக சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணண் நேற்று தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.