எரிக்கவோ நல்லடக்கம் செய்யவோ இடமளிக்க வேண்டும்

குடும்ப அபிலாஷைகளின் பிரகாரம் எரிக்கவோ நல்லடக்கம் செய்யவோ இடமளிக்க வேண்டும்: மருத்துவ நிபுணர்களின் கல்லூரி சங்கம்

by Staff Writer 31-12-2020 | 8:12 PM
Colombo (News 1st) சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள கடும் சுகாதார வழிமுறைகளின் கீழ் இலங்கையின் சகல பிரஜைகளினதும் குடும்ப அபிலாஷைகளின் பிரகாரம் எரிப்பதற்கோ அல்லது நல்லடக்கம் செய்வதற்கோ இடமளிக்கப்பட வேண்டும் என இலங்கை மருத்துவ நிபுணர்களின் கல்லூரி சங்கம் தெரிவித்துள்ளது. உடல்களை அடக்கம் செய்வதால் கொரோனா தொற்று பரவும் நிலைமை அதிகரிப்பதாக உறுதியான ஆதாரங்கள் இல்லை என அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு, நோய்த் தடுப்பு மத்திய நிலையம் மற்றும் ஐரோப்பிய நோய்த் தடுப்பு மற்றும் நிர்வாக மத்திய நிலையத்தால் COVID-இனால் உயிரிழப்பவர்களின் சடலங்கள் தொடர்பாக பின்பற்றப்பட வேண்டிய உரிய வழிமுறைகள் தொடர்பில் வௌியிடப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த உரிய வழிமுறைகளின் பிரகாரம் உடல்களை அடக்கம் செய்யவோ அல்லது எரிக்கவோ முடியும் என இலங்கை மருத்துவ நிபுணர்களின் கல்லூரி சங்கம் குறிப்பிட்டுள்ளது.