காத்தான்குடியில் பலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகம்

by Staff Writer 31-12-2020 | 4:54 PM
Colombo (News 1st) காத்தான்குடியை முடக்கத்திலிருந்து விடுவிக்கும் கால எல்லை குறித்து எதிர்வரும் 4 ஆம் திகதிக்கு முன்பு தீர்மானிக்கப்படும் என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அழகையா லதாகரன் தெரிவித்தார். காத்தான்குடியை முடக்குவதற்கு நேற்றிரவு தீர்மானிக்கப்பட்டது. மாவட்ட அரசாங்க அதிபருடன் நேற்று (30) நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அழகையா லதாகரன் கூறினார். காத்தான்குடியில் 48 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை நேற்று உறுதி செய்யப்பட்டதுடன், மேலும் பலர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார். முடக்கத்தை அடுத்து காத்தான்குடியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன், இராணுவமும் பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரதான வீதியால் பயணிக்கும் வாகனங்களுக்கு மாத்திரம் அனுமதியளிக்கப்படுவதுடன், வாகனங்கள் தரித்து நிற்பதற்கோ ஆட்களை ஏற்றி இறக்கவோ அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. காத்தான்குடியில் மேலும் பலர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், பரிசோதனைகள் நடத்தப்பட்டு திருப்தி அளிக்கும் வகையில் பெறுபேறுகள் கிடைக்கும் வரை காத்தான்குடியை முடக்கத்திலிருந்து விடுவிக்க முடியாது என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதேவேளை, யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் 9 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.