by Staff Writer 31-12-2020 | 8:02 PM
Colombo (News 1st) உக்ரைனில் இருந்து நாட்டிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் மேலும் இருவருக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஐந்து உக்ரைன் பிரஜைகளுக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த நாட்களில் இரண்டு சந்தர்ப்பங்களில் உக்ரைனை சேர்ந்த 394 சுற்றுலாப் பயணிகள் மத்தளை விமான நிலையம் ஊடாக இலங்கையை வந்தடைந்தனர்.
அவர்கள் தற்போது தென் மாகாணத்தின் சில ஹோட்டல்களில் தங்கியுள்ளனர்.
மத்தளை விமான நிலையத்தில் இந்த சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக வரவேற்கப்பட்டதுடன், அவர்கள் முகக்கவசம் கூட அணிந்திராத காட்சிகளையும் காண முடிந்தது.
இதேவேளை, உக்ரைனில் இருந்து வருகை தந்த 394 சுற்றுலாப் பயணிகளில் ஐவருக்கு மாத்திரமே COVID-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக ரஷ்யாவின் இலங்கைக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களில் 6 முதல் 8 வீதமானவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற எதிர்பார்த்து, அதற்கு தயாராகியிருந்ததாக உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.
ஒரு வீதம் தெற்றாளர்கள் என்றால் 99 வீதமானவர்களுக்கு COVID தொற்று இல்லை என்பது உறுதியாவதாக, அவர் ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நாளாந்தம் 500 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் நிலையில், உக்ரைனை சேர்ந்த ஐவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை சிலருக்கு நகைச்சுவையாகியுள்ளதாக உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.