யாழ். மாநகர சபை மேயராக வி. மணிவண்ணன் தெரிவு 

யாழ். மாநகர சபை மேயராக வி. மணிவண்ணன் தெரிவு 

எழுத்தாளர் Staff Writer

30 Dec, 2020 | 11:15 am

Colombo (News 1st) யாழ். மாநகர சபையின் புதிய மேயராக சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

யாழ். மாநகர சபையின் மேயரை தெரிவுசெய்யும் விசேட அமர்வு வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று (30) இடம்பெற்றது.

மேயர் வேட்பாளர்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆர்னல்ட் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் சட்டத்தரணி வி. மணிவண்ணன் ஆகியோரும் முன்மொழியப்பட்டனர்.

சபை உறுப்பினர் அனைவரும் பகிரங்க வாக்கெடுப்பு கோரியதால், முதல்வர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பு மூலம் இடம்பெற்றது.

வாக்கெடுப்பில் இமானுவேல் ஆர்னல்ட்டுக்கு 20 வாக்குகளும் வி. மணிவண்ணனுக்கு 21 வாக்குகளும் கிடைத்துள்ளன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் 3 உறுப்பினர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலா ஒரு உறுப்பினர் என 20 உறுப்பினர்கள் இ. ஆர்னல்ட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 10 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 10 உறுப்பினர்கள், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு உறுப்பினர் என 21 உறுப்பிர்கள் சட்டத்தரணி வி. மணிவண்ணனுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு உறுப்பினர் என 4 உறுப்பினர்கள் வாக்களிப்பின் போது நடுநிலை வகித்துள்ளனர்.

இதனால் யாழ். மாநகர சபையின் புதிய மேயராக சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் அறிவித்துள்ளார்.

கடந்த 16 ஆம் திகதி யாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவயாகவும் சமர்பிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டதால் மாநகர முதல்வர் இ. ஆர்னல்ட் தனது பதவியை இழந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்