ஜனவரி முதல் தூர சேவை பஸ்கள் வழமை போல் சேவையில் ஈடுபடும்

ஜனவரி முதல் தூர சேவை பஸ்கள் வழமை போல் சேவையில் ஈடுபடும்

ஜனவரி முதல் தூர சேவை பஸ்கள் வழமை போல் சேவையில் ஈடுபடும்

எழுத்தாளர் Staff Writer

30 Dec, 2020 | 8:22 am

Colombo (News 1st) எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் தூர சேவை பஸ்களை வழமை போன்று சேவையில் ஈடுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பஸ்களையும் சேவையில் ஈடுபடுத்துமாறு பஸ் உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கொமாண்டர் நிலான் மிராண்டா குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே, தமது ஆணைக்குழுவின் அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது, சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத சுமார் 10 பஸ்களை கைப்பற்றியதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் நாட்களிலும் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத பஸ்களின் அனுமதிப்பத்திரத்தையும் இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, எதிர்வரும் ஜனவரி முதல் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையும் குறிப்பிட்டுள்ளது.

ஆசன எண்ணிக்கைக்கு அமைய, பயணிகளை ஏற்றிச் செல்லுமாறு பஸ் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தூர சேவை ரயில் பயணங்கள் இடம்பெற மாட்டாது என ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.

சுகாதார தரப்பினரின் பரிந்துரைகள் கிடைக்கும் வரை, தூர இடங்களுக்கான ரயில் பயணங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், அலுவலக ரயில் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என ரயில்வே  திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்