உயர் நீதிமன்ற கட்டட தீ சிகரெட் துண்டினால் பரவியதா?

உயர் நீதிமன்ற கட்டட தீ சிகரெட் துண்டினால் பரவியதா? 

by Staff Writer 29-12-2020 | 10:16 AM
Colombo (News 1st) பயன்படுத்தப்பட்ட சிகரெட் துண்டினாலேயே உயர் நீதிமன்ற கட்டட தொகுதியில் தீ பரவியதாக கூறப்படும் விடயத்தையும் மறுதலிக்க முடியாது என அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எரிபொருள் விசிறப்பட்டோ அல்லது மின்சாரக் கசிவினாலோ தீ பரவவில்லை என்பது உறுதியாகியுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் சிற்றூழியர்கள் சிலர் இரகசியமான முறையில் மறைந்திருந்து சிகரெட் புகைத்துள்ளமை இதுவரையான விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த செயற்பாட்டில் ஈடுபட்டவர்கள் யார் என்பது தொடர்பில் தற்போது விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். உயர் நீதிமன்ற வளாகத்தில் தீ பரவியமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 3 குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரையான விசாரணகைளின் முன்னேற்றம் மற்றும் இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற கட்டடத்தின் கீழ் மாடியிலுள்ள உடைந்த பொருட்களை சேகரித்து வைத்திருந்த பகுதியில் கடந்த 15 ஆம் திகதி தீ பரவியது. தீயினால் குறித்த பகுதியை தவிர ஆவண காப்பகத்திற்கோ அல்லது ஏனைய சொத்துகளுக்கோ எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.