இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: இன்னிங்ஸ் மற்றும் 45 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா வெற்றி

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: இன்னிங்ஸ் மற்றும் 45 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா வெற்றி

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: இன்னிங்ஸ் மற்றும் 45 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா வெற்றி

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2020 | 6:11 pm

Colombo (News 1st) இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 45 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா வெற்றி பெற்றது.

செஞ்சூரியனில் நடைபெற்ற இந்த போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 396 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 621 ஓட்டங்களைப் பெற்றது.

இன்றைய நான்காம் நாள் ஆட்ட ஆரம்பத்தில், இலங்கை அணி தனது இரண்டாம் இன்னிங்ஸை 65 ஓட்டங்களுடன் ஆரம்பித்தது.

தினேஷ் சந்திமால் 25 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.

குசல் ஜனித் பெரேரா, டெஸ்ட் அரங்கில் தனது ஐந்தாவது அரை சதத்தை பதிவு செய்த நிலையில், 64 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

நிரோஷன் திக்வெல்ல 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, தசுன் ஷானக்க 6 ஓட்டங்களுடன் வௌியேறினார்.

தமது கன்னி டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய வனிந்து ஹசரங்க, கன்னி அரைச்சதத்தை பதிவு செய்து 59 ஓட்டங்களை பெற்றார்.

உபாதை காரணமாக விலகியிருந்த கசுன் ராஜித மற்றும் லஹிரு குமார ஆகியோர் துடுப்பெடுத்தாட களமிறங்கினர்.

எவ்வாறாயினும், அவர்களால் ஓர் ஓட்டத்தையேனும் பெற முடியவில்லை.

இரண்டாம் நாளில் பந்து வீசிய போது கசுன் ராஜித உபாதைக்குள்ளாகி வெளியேறினார். அவரால் 2 ஓவர்களையே வீச முடிந்தது.

மூன்றாம் நாளில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான லஹிரு குமாரவும் உபாதைக்குள்ளானார். அவர் 21 ஓவர்களை வீசி ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.

துடுப்பெடுத்தாடும் போது ஏற்பட்ட உபாதையால் தனஞ்சய டி சில்வா களத்தைவிட்டு வெளியேறினார்.

குசல் ஜனித் பெரேரா, தினேஷ் சந்திமால் ஆகியோரும் உபாதையுடன் துடுப்பெடுத்தாடி ஆட்டமிழந்தனர்.

இந்த நிலையில், இலங்கை அணி தமது இரண்டாம் இன்னிங்ஸில் 180 ஓட்டங்களை பெற்றது.

இந்த போட்டியில் தனஞ்சய டி சில்வா, கசுன் ராஜித, லஹிரு குமார, வனிந்து ஹசரங்க மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் உபாதைக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.

199 ஓட்டங்களைப் பெற்ற Faf du Plessis போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 03 ஆம் திகதி ஜொஹன்னஸ்பர்க்கில் இடம்பெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்