பலரது பயணங்களுக்கும் பாதையாய் பார்வதி பாட்டி...

பலரது பயணங்களுக்கும் பாதையாய் லிந்துலை பார்வதி பாட்டி...

by Chandrasekaram Chandravadani 28-12-2020 | 2:25 PM
Colombo (News 1st) பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் தற்காலத்தில் யாருக்கும் பாரமாகிவிடக் கூடாது என்கின்ற திடசங்கற்பத்தோடு, ஆண்டுகள் எழுபது கடந்தும் எறும்பு போல் சுறுசுறுப்பாய் ஓடிக்கொண்டிருக்கிறார் லிந்துலை மகாலிங்கம் பார்வதி பாட்டி. இயற்கை அழகை அள்ளித்தெளிக்கும் நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை பிரதேசத்தை மென்மேலும் தன் உழைப்பால் அழகுபடுத்துகிறார் இந்த பார்வதி பாட்டி. இறைவன் கொடுத்த வாழ்க்கையை அவனே எடுத்துக்கொள்ளும் வரையிலான வாழ் நாட்களில் யாருக்கும் பாரமாகிவிடக்கூடாது என்பதில் மிக தெளிவாக இருக்கும் இவர், வாகனங்களுக்கு டயர் மாற்றுதல் மற்றும் பழுதுபார்க்கும் வேலையை மிக கச்சிதமாக செய்து வருகின்றார். லிந்துலை நகரில் அமைந்துள்ள வாகனங்களுக்கு டயர் மாற்றும் கடையொன்றில் இவர் வேலை செய்து வருகின்றார். தோற்றத்தில் வயதானவராக இருந்தாலும் தொழிலில் இவர் இளைஞர்களை விட சற்றும் கூட சளைத்தவர் இல்லை. தனக்கென தனி வாடிக்கையாளர் கூட்டமே இருக்கின்றதாக பெருமிதம் கொள்கின்றார் இந்த பார்வதி பாட்டி. ஏகலைவன் கல்வியாக இத் தொழிலை தானே கற்றுக்கொண்ட பார்வதி பாட்டி, வளர்ந்துவரும் இளைஞர்களுக்கும் தொழிலை கற்றுத்தருகின்றாராம் ஓய்வெடுக்கும் வயதிலும் ஓய்வின்றி வேலை செய்யும் இவர், பலரது பயணங்களுக்கும் பாதையாக இருக்கின்றார் என்பதில் ஐயமில்லை. மற்றவர்களுக்கு சுமையாக வாழும் மானிடர்கள் மத்தியில் மற்றவர்களின் சுமையையும் தானே சுமந்துவரும் பார்வதி பாட்டி தன் சொந்தக்காலில் நிற்பதற்காக பலரது உதவியையும் நாடி நிற்கின்றார். பெற்றெடுத்த நான்கு பிள்ளைகளையும் கரைசேர்த்துவிட்ட இவர், தனது விடியலுக்காக இன்னமும் ஓடிக்கொண்டிருக்கின்றார்.