கலகெதர பகுதியில் பயணக் கட்டுப்பாடு; டிக்கோயா நகர சபை உறுப்பினர்கள் தனிமைப்படுத்தல்

by Staff Writer 26-12-2020 | 7:50 PM
Colombo (News 1st) பாதுக்க - கலகெதர கிழக்கு பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அந்தப் பகுதியில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 74 வயதான குறித்த நபர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளதுடன் PCR பரிசோதனைக்காக சடலம் அவிசாவளை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதென அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனிடையே, ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் செயலாளர், நகர சபை உறுப்பினர்கள் மற்றும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் கடந்த 19 ஆம் திகதி கொரோனா தொற்றுக்குள்ளான உறுப்பினர் ஒருவரின் பிறந்தநாள் வைபவத்தில் கலந்துகொண்டதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வைபவத்தில் பங்குபற்றிய நகர சபையின் தலைவர் இதற்கு முன்பு சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இதனிடையே, வட்டவளையிலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் 28 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 451 ஊழியர்களிடம் நேற்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையின் மூலம் குறித்த 28 பேரும் அடையாளம் காணப்பட்டனர். இதற்கு முன்னரும் அந்த தொழிற்சாலையின் 10 ஊழியர்களுக்கு கொரோனா தொற்றியிருந்தமை உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவோர் தொடர்பான COVID-19 பரிசோதனை நேற்றும் 12 இடங்களில் முன்னெடுக்கப்பட்டது. நேற்றைய பரிசோதனைகளில் தொற்றுக்குள்ளான 7 பேர் அடையாளம் காணப்பட்டதுடன், அந்த பரிசோதனைகளின் மூலம் இதுவரை 33 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் அனுராதபுரம் மெத்சிறி செவன வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இருவர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். இந்த அவசர சிகிச்சைப் பிரிவு கடந்த மாதம் திறக்கப்பட்டதுடன், இதற்கான தொழிலாளர் பங்களிப்பை இலங்கை இராணுவம் வழங்கியது. குறைந்த வசதிகளுடன் நோயாளர்களை குணப்படுத்த முடிந்தமை பாரியதொரு வெற்றி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.