ஆழிப்பேரலை ஆட்கொண்டு 16 வருடங்கள் நிறைவு

by Staff Writer 26-12-2020 | 2:27 PM
Colombo (News 1st) ஆழிப்பேரலை ஆட்கொண்டு இன்றுடன் 16 வருடங்கள் நிறைவு பெறுகிறது. 14 நாடுகளில் மக்களின் குடியேற்றப் பகுதிகளை ஆக்கிரமித்த இராட்சத அலைகள் 2,50,000-இற்கும் மேற்பட்ட உயிர்களை பறித்துச்சென்றன. இலங்கை நேரப்படி காலை 6.58 அளவில் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவிற்கு அண்மித்த கடற்பரப்பை ஆழிப்பேரலை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. நிலஅதிர்வு இடம்பெற்ற இடத்தில் இருந்து 1600 கிலோ மீட்டர் தொலைவிலேயே இலங்கையின் அமைவிடம் அமைந்திருந்ததால், உடனடியாக அதன் தாக்கம் உணரப்படாத நிலையில் , காலை 7.28 அளவில் ஆழிப்பேரலை ஊழிக்கூத்தாடியது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை , அம்பாறை , மட்டக்களப்பு உட்பட வடக்கு கிழக்கு கரையோர பிரதேசங்கள் மற்றும் காலி , மாத்தறை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை உள்ளிட்ட தென் கரையோர பிரதேசங்களை ஆழிப்பேரலைஆட்கொண்டது. இலங்கையில் சுமார் 35,000 உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. இந்நிலையில், 2004 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையில் உயிர் நீத்தவர்களுக்கு இன்று இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதற்கமைய, இன்று காலை 09.25 தொடக்கம் 09.27 வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதேவேளை, சுனாமி ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவத்தின் பின்னர் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக பிரகடனம் செய்யப்பட்டது. ஆழிப்பேரலையால் உயிர்நீத்த உள்நாட்டு மற்றும் சர்வதேச மக்களின் ஆத்மா சாந்தியடைவதற்காக 2005 ஆம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு வருடமும் சர்வ மத அனுஷ்டானங்கள் மேற்கொள்ளப்படுவதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.